TamilSaaga

சிங்கப்பூர் தேசிய கீதம்.. தாரை தாரையாக கொட்டிய கண்ணீர் – ஒரு புகைப்படத்தால் ஒரே இரவில் சிங்கையில் பிரபலமான நபர்.. சிலாகித்த துணைப் பிரதமர்!

சிங்கப்பூரின் 57வது தேசிய தினம் நேற்று (ஆக.9) கோலாகலமாக நடைபெற்றது. பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக நடத்த முடியாத நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்வு மிக மிக உற்சாகமாக நடைபெற்றது.

மாலை நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பு கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வகையில் அற்புதமாக அமைந்தது. இந்நிலையில், தேசிய தின விழா நிறைவு நிகழ்ச்சியின் போது, தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது, ஒருவர் கண்ணீர் மல்க அழும் காட்சி தற்போது பேசுபொருளாகி உள்ளது.

Azuan Tan என்ற 41 வயதான அந்த நபர், தேசிய கீதம் ஒலிக்க ஒலிக்க தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல், தேசப்பற்று மிகுதியில் கண்ணீர் விட்டு அழ, அத்தனை கேமராக்களும் அவரையே மொய்த்தன.

சிங்கப்பூரின் Bedok View Secondary School-ல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் Azuan Tan இதுகுறித்து பதிலளிக்கையில், “நமது தேசிய தின அணிவகுப்பு அவ்வளவு அருமையாக இருந்தது. அது என் இதயத்தை தொட்டது. நம் நாட்டின் வலிமையை பறைசாற்றியது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் எட்டுத்திக்கும் ஒலித்த ‘சிங்கை நாடு’ பாடல்… சிங்கை பிரதமரையே வியக்க வைத்த தமிழன்! – ஏ.ஆர்.ரஹ்மான் தரத்துக்கு சற்றும் குறையாத “சொக்கத் தங்கம்”!

கோவிட்-19 நோய்த் தொற்றின் போது பங்களித்த செவிலியர்கள், மருத்துவர்கள், முன்னணி கள ஊழியர்கள் மற்றும் கல்வியாளர்கள் என அனைவரின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தேசிய கீதம் ஒலித்த போது, அவர்கள் பட்ட கஷ்டத்தை ஒரு கணம் நினைத்த போது, என் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை” என்றார்.

Azuan Tan-ன் உணர்ச்சி மிகுந்த புகைப்படம் குறித்து, துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் தனது ஃபேஸ்புக் பதிவில், “இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பின் மறக்க முடியாத, நினைவில் இருந்து நீங்காத காட்சி இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

துணைப் பிரதமரே சிலாகிக்கும் வகையில் தற்போது சிங்கப்பூர் முழுவதும் ரீச் ஆகியுள்ளார் Azuan Tan.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts