TamilSaaga
United Arab Emirates

“பொன்விழா கொண்டாட்டம்” : ஐம்பது ஆண்டுகால வரலாறு – உலகம் வியக்கும் நாடாக மாறிய ஒரு “பாலைவனம்”

பரந்து விரிந்த பசுமை நிலப்பகுதிகளோ, பெருமளவிலான துள்ளிவரும் சிற்றாறுகளோ, கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணக்கிடைக்கும் செழிப்பான விவசாய நிலங்களை இல்லாத ஏறக்குறைய மனிதர்கள் வாழ தகுதி இல்லாதது என்றே சொல்லத்தக்க வகையில், 1950கள் வரை பாலைவனமாக இருந்த நாடு !

இல்லாத இயற்கை வளங்களை நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பதை விட நமக்குள் இருப்பது என்ன என கண்டுபிடித்து, இருப்பதில் சிறப்பு அடையலாமே என்ற தேடலின் விளைவாக

தங்கள்  தாய்மண்ணின் மடியில் இருந்த எண்ணை வளத்தை கண்டறிந்து, 1962 களில் அந்த எண்ணெய் ஏற்றுமதியை துவங்கிய நாள் முதல் படிப்படியாக வளர ஆரம்பித்து இன்றைக்கு உலகிலேயே செல்வச் செழிப்புள்ள நாடாக பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கும் ஒரு நாடு !

பழமைவாதம் சார்ந்த சர்வாதிகார ஆட்சியை கொண்டிருந்தாலும், தொழில்களின் வளர்ச்சிக்கும் உலக வர்த்தகத்திற்கும் ஏற்ற இடமாக தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு அதிசய நாடு !

அபுதாபி,அஜ்மன், துபாய், ஃபுஜய்ரா, ஷார்ஜா, அம் அல் குவைன் ஆகிய நாடுகளை உள்ளடக்கி கொண்டு 1972 முதல் ராஸ் அல் கைமாவையும் இணைத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வளர்ந்து நிற்கும் அந்தப் பாலைவன பெரும் ராஜ்ஜியம் தனது பொன்விழா தேசிய நாளை கொண்டாடுகிறது.

1971ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்று,மேற்சொன்ன அரபு நாடுகள் ஒன்றிணைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆன நாளே அங்கு தேசிய நாள். அந்த தேசிய நாளில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களை மகிழ்ச்சியோடு தொடங்கியிருக்கிறது நமது இந்த பாலைவன ராஜ்யம்!

இன்றைக்கு மிகப் பெருமையாக பொன்விழா ஆண்டில் தலைநிமிர்ந்து நிற்கும் இந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடந்து வந்த சில வரலாற்றுத் தடங்களை கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாமா?!

1971 டிசம்பர் 2

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உருவான தினம் !அதன் முதல் தேசிய தினமும் கூட ! முதல் தேசிய தினம் உருவான போது இணைந்திருந்த 6 நாடுகளும் அந்த ஆறு நாடுகளில் ஆட்சி செய்து வந்த அரச குடும்பத்தின் உறுப்பினர்களும் இணைந்து இந்த புதிய வரலாற்றுப் பாதையை துவக்கி வைத்தார்கள் !

1971 டிசம்பர் 9

ஐக்கிய நாடுகள் சபை இந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைப்பை அங்கீகரித்து தனது உறுப்பு நாடாக இணைத்துக்கொண்டது.

 1972 பெப்ரவரி 10

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 7ஆவது உறுப்பு நாடாக ராஸ். அல் கைமா இணைந்தது

1972 அக்டோபர் 5

போர்ட் ரஷீத் எனக் குறிப்பிடப்படும் மினா ரஷீத், ஐக்கிய அரபு எமிரேட்சின் மனிதனால் உருவாக்கப்பட்ட கப்பல் முனையம்,அதன்  முதல் வணிக துறைமுகம் தொடங்கப்பட்டது.

1976 மே 6

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஏழு உறுப்பு நாடுகளும் தங்களது ஆயுதப் படைகளை ஒருங்கிணைத்தன.

1979 பிப்ரவரி 26

மினா ரஷீத் திறந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு, இன்றைக்கும் உலகின் மிகப்பெரிய மிக சுறுசுறுப்பான துறைமுகமாக கருதப்படும் ஜெபல் அலி துறைமுகம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதே வரலாற்று சிறப்புமிக்க நாளில் தான் இன்று கூட உயர்ந்து பார்க்கக்கூடிய துபாய் உலக வர்த்தக மையம் தொடங்கப்பட்டது.

1981 மே 5

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது துணை அமைப்பாக கல்ஃப் கோ ஆபரேஷன் கவுன்சில் எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு கூட்டமைப்பினை  அரபு நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார ஒன்றியமாக வடிவமைத்து உருவாக்கியது.

1982 ஜனவரி 2

அபுதாபியின் பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்பட்டது

1999 டிசம்பர் 1

உலகின் முதல் 7 நட்சத்திர விடுதியும், துபாயின் ஆடம்பரமான, சுற்றுலாப்பயணிகளின் கவனயீர்ப்பு தளமான, புர்ஜ் அல் அரப் திறக்கப்பட்டது.

 2006 டிசம்பர் 16 முதல் 20

ஐக்கிய அரபு எமிரேட்சின் முதல் தேர்தல் நடத்தப்பட்டது.

2009 ஆகஸ்ட் 9

துபாயில் பறக்கும் ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2014 ஜூன்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது செவ்வாய் கிரகப் பயணம் திட்டத்தை அறிவித்தது.

இன்றைக்கு நாம் பார்க்கக் கூடிய பளபளப்பான, பகட்டான, ஆடம்பரமான, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மிகக்குறைந்த ஆண்டுகளில் படிப்படியாக, அதேசமயம் அசுர வேகத்தில் இந்த வளர்ச்சியை எட்டி இருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் .

தனது பொன்விழா தேசிய நாளை கொண்டாடும் இந்த பாலைவன சாம்ராஜ்யத்தை நாமும் பாராட்டுவோம்!

Related posts