சிங்கப்பூரில் கள்ளத்தனமாக சிகரெட்டுகளை வாங்குவதற்கு போலியான S$100 நோட்டுகளை அச்சடிக்கும்படி ஒருவர் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க, 45 வயதான மஹதி அப் லத்தீஃப் அவருக்கு உதவ ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அந்த இருவரும் மொத்தமாக $18,500 போலி சிங்கப்பூர் வெள்ளி தாள்களை உருவாக்கியுள்ளனர். இது ஒரே வழக்கில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய கள்ளநோட்டு மோசடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட நேரத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த Mahadhi, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காலியான கிடங்கைக் கண்டுபிடித்து கத்தியால் நோட்டுகளை வெட்ட அந்த மற்றொரு நபருக்கு உதவியுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இறுதியில் போலி நாணயத் தாள்கள் மோசடியில் ஈடுபட்டதாக ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த சிங்கப்பூர் நாட்டவருக்கு ஆறு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனையும், மூன்று பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட இன்னொரு நபரான ஃபர்ஹான் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி, தனது லேப்டாப்பில் 100 டாலர் நோட்டுகளுக்கான template இருப்பதாகவும், ஆகவே சட்டவிரோத சிகரெட்டுகளை வாங்குவதற்கு போலி பணத்தை அச்சிடும் பணியை செய்யலாம் என்றும் ஃபர்ஹான் மஹதியிடம் கூறினார்.
உடனே மஹதி, ஃபர்ஹானிடம் சட்டவிரோத சிகரெட்டுகளை வாங்க தனக்கு ஆள் தெரியாது என்றும், ஆனால் சில போலி நோட்டுகள் தனது சொந்த உபயோகத்திற்காக வேண்டும் என்றும் அவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் 28 முதல் ஜூலை 2ம் தேதிக்குள் 185 போலி 100 டாலர் நோட்டுகளை அச்சடித்துள்ளனர்.
இறுதியில் கள்ளநோட்டு புழக்கத்தை கண்டறிந்த போலீசார் ஜூலை 5ம் தேதி Mahadhiயை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அவர் போதை பொருள் உட்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.