சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 20) 56 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். CNA அளித்த தகவலின்படி கடந்த வெள்ளிக்கிழமை (மே 20), பூன் லே பிளேஸில் கத்தியுடன் அலைந்த ஒரு நபர் பற்றி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக போலீசார் அந்த இடத்திற்கு விரைந்தனர், அந்த நபர் போலீஸ் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டதுமட்டுமல்லாமல் கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
அதிகாரிகளின் வாய்மொழி கட்டளைகள் மற்றும் அறிவுறுத்தல்களை அந்த நபர் புறக்கணித்ததாகவும், அவர்கள் மீது தொடர்ந்து குற்றம்சாட்டி தாக்க முயன்றதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் அவரை பிடிக்க அருகில் இருந்த காவலர் ஒருவர் Teaser துப்பாக்கி கொண்டு அவரை தாக்கியுள்ளார். அதன் பிறகு அந்த 56 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து கத்தியை போலீசார் கைப்பற்றினர்.
சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும், அதே போல் குற்றவியல் மிரட்டல் குற்றத்திற்காகவும் அந்த நபர் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொது இடத்தில் தாக்குதல் நடத்தும் வகையில் ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் மற்றும் குறைந்தபட்சம் ஆறு தடியடிகள் வழங்கப்படலாம்.