TamilSaaga

“சிங்கப்பூரை பார்த்து கத்துக்கோங்க”.. டிவி நேரலையில் வெளுத்து வாங்கிய வழக்கறிஞர் அருள்மொழி

தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு என்பது அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக உள்ளது. ஹிந்தி எதிர்ப்பை வைத்து அவ்வப்போது தமிழகத்தில் அரசியல் செய்யப்படுவது வாடிக்கை. குறிப்பாக, 2014ல் இந்தியாவில் பாஜக ஆட்சியமைத்த பிறகு, மீண்டும் தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

ஹிந்தி படிப்பதில் எங்களுக்கு பிரச்சனையில்லை; ஆனால், ஹிந்தி திணிப்பு தான் எங்கள் பிரச்சனை என்பதே பலரது கருத்தாக உள்ளது. எனினும், சாமானிய மக்களில் ஹிந்தி கற்க விரும்புவார்கள் அதனை படித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். தேவை என்று நினைப்பவர்கள் படிக்கிறார்கள்; தேவையில்லை என்று நினைப்பவர்கள் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள். இதுதான் யதார்த்தம்.

இந்நிலையில், தமிழகத்தின் பிரபல நியூஸ் சேனல் ஒன்றில் நேற்று (மே.9) இரவு ஒரு விவகாரமான டாப்பிக்கில் விவாதம் ஒன்று நடத்தப்பட்டது. அதாவது, “தனி மனித உரிமையை பறித்ததா இந்தி எதிர்ப்பு கொள்கை?” என்று தலைப்பில் விருந்தினர்களை அழைத்து விவாதம் நடத்தினார்கள்.

அதில், திராவிட கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழியும் கலந்து கொண்டார். அதில் அவர் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிங்கப்பூரை பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் இன்று பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அருள்மொழி, “எந்த மொழியாக இருந்தாலும் 2 மாதத்தில் ஒருவர் அதனை கத்துக்கலாம். பாராளுமன்றத்துல எல்லா மொழியைச் சேர்ந்தவர்களும் பிரதிநிதிகளாக வர்றாங்க. அதில், ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் தெரியும். நமக்கோ தமிழும், ஆங்கிலமும் தெரியும். ஆனா, ஹிந்தி தெரிஞ்சவங்க வேற எந்த மொழியையும் நாங்க கத்துக்க மாட்டோம். கத்துக்கிட்டு பேச மாட்டோம். ஆனால், நீங்க எல்லாம் ஹிந்தி கத்துக்கிட்டு வந்து பேசுங்கன்னு சொல்றது எவ்ளோ பெரிய அராஜகம்!?

மேலும் படிக்க – சிங்கப்பூரில் ஊழியர்கள் பற்றாக்குறை.. “அதிகளவு உள்ளூர் ஆட்களை வேலைக்கு எடுங்க” – அமைச்சர் டான் சீ லெங்

இது தான் அனைவரையும் சமமாக நடத்துவதற்கான ஒரு அணுகுமுறையா? இதுக்கு இந்திய அரசாங்கம், எல்லா மொழிக்கும் ஒரு டிரான்ஸ்லேட்டர் வைக்கணும். யார் வேண்டுமானாலும், எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசலாம்.. கேள்விக்கேட்கலாம். அது அப்படியே எல்லோருக்கும் அவங்கவங்க மொழியில டிரான்ஸ்லேட் ஆகி கேட்கும். இந்த ஏற்பாடைத்தானே அரசு செஞ்சிருக்கணும். டிஜிட்டல் இந்தியான்னுலாம் சொல்றீங்க.. ஏன்.. ஒரு டிரான்ஸ்லேட்டர் இந்தியா உருவாகக் கூடாதா?

சீனாவுல ஒரு டாக்சி டிரைவர்ட்ட போய் தமிழ்ல நீங்க போற இடத்தைப் பற்றி சொல்லலாம். அவங்க டிரான்ஸ்லேஷன் ஆப் மூலமா அதை சீன மொழியில கேட்டு புரிஞ்சிகிட்டு போக வேண்டிய கரெக்ட்டா கொண்டு போய் சேர்க்குறாங்க. சிங்கப்பூருக்கு போய் பாருங்க. மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் எல்லா இடங்களிலும் தமிழிலேயே எழுதி போட்டிருப்பாங்க. யாருக்கும் எந்த பிரச்சனையும் அங்க ஏற்படாது. அங்க எல்லா மொழிகளையும் பேசாமலா இருக்காங்க?

ஹிந்தி-ங்குறது அவங்களுக்கு சமஸ்கிருதத்துக்காக ஒரு நூல் பிடிக்கிற பிரச்சனை தான். அவங்க நோக்கம் என்பது சமஸ்கிருதம். அதுக்கு முன்னோட்டமா தான் அவங்க ஹிந்தியை கொண்டு வந்துகிட்டு இருக்காங்க. சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக கொண்டு வர வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts