TamilSaaga

மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவைகளுக்கு அனுமதி.. சிங்கப்பூரில் இருந்து இனி ஈஸியா இந்தியா போகலாம் – ஆனா டிக்கெட் கேன்சல் செய்தால் Refund கிடைக்குமா?

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு மார்ச் 27-ம் தேதி முதல் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது இந்திய அரசு. இதனால், சிங்கப்பூரில் இருந்து இந்தியா வருவதும், அங்கிருந்து சிங்கப்பூர் வருவதும் எளிது என்று மேம்போக்காக தோன்றினாலும் களநிலவரம் என்ன… சிங்கப்பூரில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களுக்கு இதனால் என்ன பலன்… இந்தத் தகவல் பத்தி விரிவா தெரிஞ்சுக்கலாம் வாங்க…

கொரோனா லாக்டவுன்

கொரோனா பெருந்தொற்று பரவலால் இந்தியா கடந்த 2020 மார்ச் மாதம் முதல் வெளிநாட்டு விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்தது. வந்தே பாரத் விமானங்கள் வாயிலாக அத்தியாவசியப் போக்குவரத்து நடந்து வந்தாலும், பொதுவான விமானப் பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைதான் இருந்து வந்தது. கொரோனா தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில், ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு இந்தியா அனுமதி அளித்திருக்கிறது. அந்த நாட்டின் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் மார்ச் 27-ம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால், பழையபடி சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்தியா போய்வர முடியுமா… சாதக, பாதகங்கள் என்னென்ன?

மேலும் படிக்க – சிங்கப்பூரில் தாங்க முடியாத வலியில் துடிக்கும் தமிழ்நாட்டு தொழிலாளி… மூலையில் முடக்கிய ‘மூல வியாதி’ – பணம் திரட்ட திண்டாடும் குடும்பம்

கொரோனாவுக்கு முன் – கொரோனாவுக்குப் பின்!

இந்திய அரசின் இந்த அனுமதியைப் பொறுத்தவரை, பொதுவாக வெளிநாட்டுத் தொழிலாளர்களால் வரவேற்கப்படக் கூடிய விஷயம்தான் என்றாலும், சில சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டாலும், நிச்சயமாக பழையபடி விமானங்களில் வழக்கமாக சென்று வர முடியாது என்பதுதான் களநிலவரம் என்கிறார்கள் தொழிலாளர்கள். கொரோனா கால கெடுபிடிகள் அதிகம் என்பதால், கொரோனாவுக்கு முன் – கொரோனாவுக்குப் பின் என்றபடியான வேறுபாடுகள் இந்தப் பயணத்தில் இருக்கும் என்பதுதான் நிதர்சனம் என்கிறார்கள்.

கொரோனாவால் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு விதிமுறைகள், விமான நிறுவனங்களின் கட்டுப்பாடுகள், விமான நிலையங்களில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் என கெடுபிடிகள் கடுமையாக இருக்கும். இதனால், பழையபடியே சுதந்திரமாக விமான சேவைகளைப் பயன்படுத்த முடியும் என்பது சந்தேகம்தான் என்பதுதான் என்பதே பரவலான கருத்தாக உள்ளது. இந்த அறிவிப்பால், பலர் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துவிட்டு, விமான நிலையத்துக்கு வருகிறார்கள்.

வந்தபிறகுதான், விதிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவை பற்றி முறையாகத் தெரியவருகிறது. கடைசி நேரத்தில் அந்த கட்டுப்பாடுகளைச் சரியாகப் பூர்த்தி செய்யாத நிலையில், டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்ப வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நாடு, விமான நிறுவனங்களுக்கு நிறுவனங்கள் விதிமுறைகள் மாறுகின்றன. இதில், சோகம் என்னவென்றால் தனி நபர்கள் என்றில்லாமல், டிராவல் ஏஜெண்டுகள் பலருக்கும் இதுபற்றி தகவல் முறையாகத் தெரிந்திருப்பதில்லை. அதேபோல், மாற்றப்படும் விதிமுறைகள் பற்றிய தகவல்கள் விமான நிலையத்தில் இருக்கும் அதிகாரிகளுக்குக் கூட கடைசி நேரத்திலேயே சொல்லப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

மேலும் படிக்க – இந்தியரா இருந்தால் வீடு கிடையாதா?.. மெல்ல மெல்ல பின்வாங்கிய ஏஜெண்டுகள் – சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு வீடு கொடுப்பதில் பாரபட்சமா?

இதனால், பல இடங்களில் குழப்பங்கள் நிகழ்ந்து வருவதாக வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார் சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவர். ஒருவேளை நீங்கள் விமானப் பயணத்துக்குத் திட்டமிடுவதாக இருந்தால், அந்த நாட்டில் அமலில் இருக்கும் விதிமுறைகள், விமான நிறுவனங்கள் சொல்லும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவை பற்றி முழுமையாக அறிந்துகொண்டு திட்டமிடுவது நல்லது. இல்லையென்றால், நீங்கள் கடைசி நேரத்தில் பயணத்தின்போது சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிடும்.

உடனே திரும்ப முடியுமா?

அதுதான், சர்வதேச விமானப் போக்குவரத்துதான் தொடங்கியாச்சே… விமான டிக்கெட் போட்டு சொந்த ஊருக்குப் போய்விட்டு இரண்டு நாட்கள் அல்லது ஒருவாரம், பத்து நாட்களில் சிங்கப்பூர் திரும்பிவிடலாம் என்று நினைத்தால், அது எல்லாருக்கும் சாத்தியமானது அல்ல என்பதுதான் நிதர்சனம். Worker Category-ல் வேலை பார்ப்பவர்கள் அவ்வாறு உடனடியாக சொந்த ஊர் சென்றுவிட்டு சிங்கப்பூர் திரும்ப முடியாது. சிங்கப்பூர் விதிமுறைகளின்படி ஒவ்வொரு விதமான விசா வைத்திருப்பவருக்கும் ஒவ்வொருவிதமான அனுமதியை வைத்திருக்கிறார்கள்.

அதேபோல், டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு உரிய தேதியில் பயணிக்க முடியாமல் போகும் சூழலில், பணத்தைத் திரும்பப் பெறுவதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகிறார்களாம் தொழிலாளர்கள். அதேபோல், S Pass',Employment Pass’ போன்ற ஒரு சில Work Permit வைத்திருப்பவர்கள், உடனே சொந்த ஊருக்குப் போய்விட்டுத் திரும்புவதற்கான அனுமதி இருக்கிறது.

அதேபோல், டிக்கெட் கட்டணத்தைப் பொறுத்தவரை, வழித்தடங்களைப் பொறுத்து டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, `Air Asia’ வழங்கும் சேவையில் சிங்கப்பூர் – திருச்சி, திருச்சி – சிங்கப்பூர் என இருவழிப் பயணத்துக்கான கட்டணமே 160 முதல் 180 சிங் டாலர்கள்தான். குறைவான கட்டணம்தான் என்றாலும், டிக்கெட் பதிவு செய்துவிட்டு நீங்கள் பயணம் செய்ய முடியாமல் போனால், பணத்தைத் திரும்பப் பெற முடியாது.

மொத்தத்தில், இந்த காலகட்டத்தில் நீங்கள் சொந்த ஊர் சென்று வர விரும்பினால் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு திட்டமிடுவது நல்லது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts