கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொரோனா காலத்தில் முறையான உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் போனது. சமைக்க முடியாத சூழலில் அவரால் நீரிழிவு நோய்க்கு உகந்த உணவை உட்கொள்ள முடியவில்லை. இதனால், அவருக்கு உடல்ரீதியாக வேறொரு பிரச்னை ஏற்பட்டது. முறையான உணவு இல்லாத சூழலில் அவருக்கு மூல வியாதி பாதிப்பு ஏற்பட்டது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மூல வியாதியால் பாதிப்பு கடுமையானது. தாங்க முடியாத வலியில் அவர் துடித்து வருகிறார். இதுகுறித்து அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு ‘Its Raining Rain coats’ என்ற தன்னார்வு அமைப்பு தகவல் தெரிவித்திருக்கிறது. ஆனால், நிறுவனம் தரப்பில் எந்தவொரு உதவியும் கிடைக்காத சூழலில் அவரை சொந்த ஊருக்கே திரும்ப அனுப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
‘Its Raining Rain coats’ என்பது சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காகத் தொடங்கப்பட்ட தன்னார்வல அமைப்பாகும். இந்த அமைப்பின் தன்னார்வலர்கள், சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான உதவிகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள்.
நீரிழிவு நோயின் பாதிப்பில் இருக்கும் அந்த தொழிலாளர், கடுமையான மூலவியாதியாலும் பாதிக்கப்பட்டிருப்பதால், அந்த அமைப்பின் தன்னார்வலரிடம் கூட பேச முடியாமல் தவித்து வருகிறார். கொடுமையான வலியில் துடிக்கும் அவரை சொந்த ஊரான தமிழ்நாட்டின் கடலூருக்கு அனுப்ப தன்னார்வலர்கள் முடிவு செய்து, அதற்காக உதவிகளை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

அவருக்கு 9 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக அதிக வசதி இல்லாத அவர், தனது மனைவி மற்றும் பெற்றோரையும் பார்க்க வேண்டிய சூழலில் இருக்கிறார். இப்படியான சூழலில் சொந்த ஊர் திரும்புகையில் அவரால், குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள முடியாத கையறு நிலையில் இருக்கிறார்.
இந்த சூழலில் சொந்த ஊருக்கு அவரை அனுப்ப, சிங்கப்பூரில் இருக்கும் அவரது நண்பர்கள், ஆளுக்கு 500 டாலர்கள் பகிர்ந்தளித்து விமான டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தநிலையில், சொந்த ஊர் திரும்பி, அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ள தன்னார்வலர்கள் நிதி திரட்டி வருகிறார்கள். நீங்கள் நேரடியாக அவருக்கு நிதியுதவி செய்ய முடியும்.
‘Its Raining Rain coats’ அமைப்பின் ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடர்புகொண்டால், அவர் பற்றிய விவரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். இரண்டு குழந்தைகளோடு பொருளாதார ரீதியாகக் கடுமையான சூழலில் இருக்கும் அவர், குடும்பத்தின் மேம்பாட்டுக்காக சிங்கப்பூர் வந்து உழைக்கத் தொடங்கியிருக்கிறார்.
ஆனால், உடல்நலக் குறைவால் இங்கும் அவரால் உழைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படியான நிலையில், உங்களின் உதவி அவருக்கு நிச்சயம் தெம்பூட்டும். அதேபோல், சொந்த ஊர் திரும்பும் முன்னர், அவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் யாரேனும் உங்களுக்குத் தெரிந்திருந்தால், அவர்கள் பற்றிய தகவலையும் நீங்கள் பகிரலாம். உங்களின் சிறிய உதவி, நிச்சயம் அவரது குடும்பத்தினர் வாழ்வில் ஒளியேற்றும்.