சிங்கப்பூரில் பொது இடத்தில் தனது நண்பருடன் சிறிது பீர் குடித்துவிட்டு, ஜீவனந்தன் கோவிந்தன் என்ற இந்தியா வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளார். அந்த சிறுமி தனது பிடியில் இருந்து விடுபடாமல் இருக்க சிறுமியின் கைகளை இறுக்கமாக பிடித்திருந்தார் அவர் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றது.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அந்த 11 வயது சிறுமி, பட்டப்பகலில் கூட தனியாக எங்கும் செல்ல பயப்பட்டார் என்றும், மேலும் தனக்கு ஏன் அப்படி நடந்தது என்று கேள்வி எழுப்பினர் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. கோவிந்தன் என்ற அந்த நபருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் மூன்று பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி இரவு 8.30 மணியளவில், ப்ராஜெக்ட் இன்ஜினியராகப் பணிபுரியும் கோவிந்தன் தனது வேலையை முடித்துவிட்டு, மூன்று பீர் கேன்களை வாங்கிக் கொண்டு, சுவா சூ காங் MRT நிலையம் அருகே அமர்ந்து தனது மனைவியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்ததாக நீதிமன்றம் கூறியது. அப்போது அவரது நண்பரும் அவருடன் சேர்ந்துள்ளார். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமி லாட் ஒன் மாலுக்குச் சென்று தனது தாயுடன் இரவு உணவு சாப்பிடுவதற்காக தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சிறிது தூரம் நடந்த அந்த சிறுமிக்கு அவளது தாயிடமிருந்து அழைப்பு வந்தது. தான் பணப்பையை வீட்டில் மறந்துவிட்டு வந்துவிட்டதாகவும் அதை எடுத்துவருமாறு தாய் கூற அந்த சிறுமி மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, லாட் ஒன் செல்லும் வழியில் இருந்த கோவிந்தனும் அவனது நண்பரும், அந்த சிறுமி ஒரு அடுக்குமாடி குடியிருப்பை நோக்கி நடப்பதைக் கவனித்தனர். கோவிந்தன் அந்த சிறுமியை அணுகி, நான் உன்னோடு வீட்டுக்கு வரட்டுமா? என்று கேட்க, சிறுமி நிராகரித்து விட்டு வேகமாக நடந்தாள். ஆனால் அவன் அவளைப் பின்தொடர்ந்து, அங்கிருந்து அந்த சிறுமி நகர்வதை தடுக்க கைகளைப் பிடித்துக் கொண்டான்.
கோவிந்தன் சிறுமியை அழைத்துச் சென்று ஒரு பெஞ்சில் உட்காரச் சொல்ல சிறுமி மறுக்க இறுதியில் அவள் தோள்களில் கைகளை வைத்து உட்கார வைத்து சிறுமியின் மார்பு, தொடை உள்ளிட்ட இடங்களை தொட்டு இறுதியில் சிறுமியின் முகக்கவசத்தை கழட்டி முத்தமிட சென்றபோது சிறுமி அங்கிருந்து கஷ்டப்பட்டு தப்பி வீட்டுக்குள் சென்று தாய்யிடன் அலைபேசியில் நடந்ததை கூறியுள்ளார்.
அதன் பிறகு அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு கோவிந்தன் கைது செய்யப்பட்டார்.