TamilSaaga

“என் செல்லமே.. பத்திரமா போய் வா” – கண்ணீருடன் தந்தை.. கலங்கி நின்ற மகள் – உக்ரைன் போரின் உச்சக்கட்ட சோகம்! – Video

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கி 24 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. அதற்குள் உக்ரைன் தரப்பில் 300க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுவிட்டன. வான்வழி, கடல் வழி, தரை வழி என அனைத்து விதத்திலும் ரஷ்யா உக்ரைனை தாக்கி வருகிறது.

இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றுக் கொண்டிருக்கின்றனர். கிழக்கு மற்றும் மத்திய உக்ரைனில் தான் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் பெருவாரியான மக்கள் மேற்கு எல்லையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

நிமிடத்திற்கு நிமிடம் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், 16 வயது முதல் 60 வயது வரையிலான அனைத்து உக்ரைன் ஆண் மகன்களும் ராணுவ பணியில் கட்டாயம் ஈடுபட வேண்டும் என்று உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட தயார் என்றால், ஆயுதங்களை வழங்கவும் தயார் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், செய் இல்லையேல் செத்து மடி எனும் நிலையில் உக்ரைன் ஆண்கள் உள்ளனர். இதனால், அங்கு ஆண்கள் எவரும் நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான நிலையில், தனது மனைவி மற்றும் மகளை பத்திரமான இடத்திற்கு அனுப்பும் ஒரு தந்தையின் உணர்ச்சிகரமான வீடியோ காண்போரை கலங்கச் செய்கிறது. ஆண்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதால், அந்த நபர் தனது மனைவி, மகளை பிரியும் போது கண்ணீர் விட்டு அழுகிறார். இனி தன் மகளை காண முடியுமா என்ற தவிப்பு அவர் கண்களில் தெரிகிறது. அவர் கண்ணீரில் தெரிகிறது. போர் சூழல் எப்படி வேண்டுமானாலும் இருக்கும். எப்போது தாக்குதல் நடக்கும், எங்கு குண்டு போடுவார்கள் என்று எதுவும் தெரியாத சூழலில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்.

மகளை பேருந்தில் ஏற்றிவிடுகையில், அவள் ஒரு காகிதம், தர அதைப் பிரித்துப் படித்த அந்த தந்தை வெடித்து அழுகிறார். அப்போது அவருக்கு அங்கு தைரியம் சொல்லக் கூட ஆள் இல்லை. மகளை கட்டியணைத்து ‘மிஸ் யூ’ என்று அவர் சொன்னது உண்மையில் வேதனையாக இருந்தது.

போர் என்றால் என்ன என்று கூட தெரியாத அந்த பிஞ்சு குழந்தை, தன் தந்தையிடம் ‘என்னைவிட்டு போகாதீங்க அப்பா’ என்று சொல்லும் அந்த கொடுமை இருக்கறதே.. விவரிக்க வார்த்தைகள் இல்லை.

தனக்கு என்ன ஆனாலும், தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று அந்த தந்தை தன் பொறுப்பை முடித்துவிட்டார். இனி மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியென்று ஒன்று இருந்தால், அது இந்த போரை நிறுத்தட்டும். அந்த பிஞ்சு தன் தந்தைக்கு மீண்டும் முத்தமிடும் காலத்தை ஏற்படுத்தட்டும்!.

Related posts