TamilSaaga

ஊழலில் சிக்கிய “பண முதலை”.. கடைசி வரை “மன்னிக்காத” லீ குவான் யூ.. விரக்தியில் “தற்கொலை” – ஊழலற்ற சிங்கப்பூரை உருவாக்க விதைக்கப்பட்ட முதல் மரணம்!

ஊழல் தடுப்புக்கு சிங்கப்பூர் எடுத்த முயற்சிகளின் வெற்றியைப் பார்த்து உலகமே வியந்தது. ஊழலை இன்னமும் ஒழிக்க முடியாமல் பல நாடுகள் திண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், அதை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிந்த நாடு சிங்கப்பூர்.

Transparency International (TI) என்பது ஜெர்மனியில் இருக்கும் ஊழலுக்கு எதிரான அமைப்பு. ஒவ்வொரு வருடமும், ஊழல் ஒழிப்பின் அடிப்படையில் உலக நாடுகளை இவர்கள் வரிசைப்படுத்துகிறார்கள். இந்த பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதல் 10 இடங்களுக்குள் தவறாமல் இடம் பிடித்துவிடும். இதுவே, சிங்கப்பூரின் ஊழல் ஒழிப்பு முயற்சிகளுக்கான சான்று.

கடைசியா 2021-ல் வெளியான Transparency International பட்டியலில், மொத்தம் உள்ள 180 நாடுகளில், 85 புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பிடித்திருந்தது சிங்கப்பூர்.

ஆனால், இந்த பெருமை ச்சும்மா போகிற போக்கில் வந்தவை அல்ல. Just Like that கிடைத்த அங்கீகாரம் அல்ல. முன்னாள் பிரதமரும், சிங்கையின் தந்தையுமான லீ குவான் யூ அவர்கள் ஊழலுக்கு எதிராக காட்டிய “சிங்க முகம்” தான் இதற்கு காரணம். அவரது கர்ஜனை அவ்வளவு கடுமையாக இருந்தது.

மேலும் படிக்க – “என் சாபம் சும்மா விடாதுடா பாவிகளா” – சிங்கப்பூரில் எட்டு ஆண்டுகால வாழ்க்கையை நிறைவு செய்த தமிழக ஊழியரின் புலம்பல்

ஊழல் செய்வது சொந்த ரத்தத்தையே பெண்டாளும் ஈனத்தனம் என்று லீ கருதினார். ‘இந்த அவமானம் என் பிறந்த பொன்னாட்டுக்கு வர அனுமதிக்கமாட்டேன்’ என்று முழங்கினார். ஊழலை வேரோடு அறுக்க வேண்டுமெனில், கடுமையான சட்டங்கள் மட்டும் போதாது.. ஊழல் செய்ய நினைக்கும் எண்ணத்தை மாற்ற வேண்டும். ஏன் அப்படியொரு சிந்தனை அவர்களுக்கு ஏற்படுகிறது? என்பதை ஆராய வேண்டும் என்பதை லீ உணர்ந்தார்.

தனியார் துறையினரை விட, அரசு அதிகாரிகளின், ஊழியர்களின் சம்பளம் குறைவாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம் என்ற உண்மையையும் அவர் கண்டறிந்தார். உடனடியாக அவர்களின் ஊதியத்தை தனியாருக்கு நிகராக உயர்த்தினார். ஊழலை ஒழிக்க உருவாக்கப்பட்டு, டம்மியான ஒரு அமைப்பாக இயங்கி வந்த Corrupt Practices Investigation Bureau (CPIB) துறைக்கு சர்வ அதிகாரங்களையும் கொடுத்தார்.1963-ல் இந்த துறையை தனது நேரடி கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்தார். தவறு செய்பவர்கள் மீது சவுக்கு சுழன்றது.

யார் வேண்டுமானாலும் CPIB-யிடம் புகார் கொடுக்கலாம். CPIB ஊழியர்களுக்கு என்ன விதிகள் தெரியுமா? ஒருவர் நேரடியாக புகார் கொடுக்க வந்தால், ஐந்தே நிமிடங்களுக்குள் அவரிடமிருந்து புகாரைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு மேல் யாரையும் காத்திருக்க வைக்கக் கூடாது. தொலைபேசி அழைப்பு வந்தால், மூன்றாவது மணி அடிப்பதற்குள் எடுத்து பேசி விட வேண்டும்.

நடவடிக்கைகள் / விசாரணைகள் உடனே தொடங்கும். 2 மாதங்களுக்கு மேல் எந்த வழக்கும் விசாரிக்கப்படக் கூடாது. அதற்குள் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். அதே சமயம் பொய்க் குற்றச்சாட்டு, பொய் புகார் தகவல்கள் கொடுப்பவர்களுக்கு 10,000 டாலர் அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

முதலில் புகார் கொடுக்க பொதுமக்கள் அஞ்சினாலும், தொடர்ந்து லீ அரசு எடுத்த கெடுபிடி நடவடிக்கைகளால், ‘உண்மையில் இவர்கள் அக்கறை காட்டுகிறார்கள்’ என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டது. புகார்கள் குவிந்தன. நடவடிக்கைகள் பாய்ந்தன. அதிகாரிகள், போலீசார் என்று பாகுபாடின்றி நடவடிக்கை பாய்ந்தது. கம்பி எண்ணினார்கள், ஜெயிலில் களி தின்றார்கள்.

மேலும் படிக்க – “என் கைக்குழந்தையோட சேர்த்து 5 பேரையும் கொன்னுட்டாங்க” : நாட்டுக்காக போனேன்.. ஆனா குடும்பத்தையே பறிகொடுத்துட்டேன் – கலங்கும் உக்ரைன் வீரர்

ஆனால், இதுவெல்லாம் வெறும் டிரைலர், மெயின் பிக்சர் இனிமேல் தான் ஆரம்பம் என்பது போல் அமைந்தது இந்த சம்பவம். இன்னும் சொல்லப்போனால், கடந்த 2021 ஆண்டு வரை சிங்கப்பூர் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து 10 இடங்களுக்குள் இருப்பதற்கு இந்த சம்பவமே தொடக்கப் புள்ளியாக அமைந்தது. ஊழல் ஒழிப்பில் சிங்கப்பூர் ஈவு இரக்கமே காட்டாது என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழ பதியவும் காரணமாக அமைந்தது.

1980-களின் தொடக்கத்தில், சிங்கப்பூர் தேசிய வளர்ச்சித்துறை அமைச்சர் தே சியங் வான் (Teh Cheang Wan) மீது ஊழல் புகார் வந்திருந்தது. சிங்கப்பூர் வீட்டு வசதி வாரியத்தின் தலைவரும் இவர் தான். இரண்டு கட்டுமான கம்பெனிகளிடம் தலா 50,000 டாலர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு வாரியம் வீடுகட்டத் திட்டமிட்டிருந்த நிலங்களை அவர்களுக்கு தர முடிவு செய்திருந்தார். இதனால், அவரை விசாரிக்க CPIB அதிகாரிகள் அனுமதி கேட்டனர். லீயைப் பொறுத்தவரை நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே, யாரும் சட்டத்தை விடப் பெரியவர்கள் அல்ல என்பதே தாரக மந்திரம்.

விசாரணையின் போது வான் தன் மீதான குற்றங்களை மறுத்தார். லீயைச் சந்தித்து, தன் தரப்பு நியாயங்களை விளக்க முற்பட்டார். எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், கடைசி வரை லீ அவரை சந்திக்க ஒப்புக்கொள்ளவே இல்லை. சந்திக்க ‘முடியாது’ என்று மறுத்துவிட்டார்.

டிசம்பர் 15, 1986 காலை, லீ அவர்களின் கையில் ஒரு கடிதம் இருந்தது.

பிரதமருக்கு,

கடந்த இரண்டு வாரங்களாக நான் சோகமாகவும், மனச் சோர்வுடனும் இருக்கிறேன். இந்த துரதிர்ஷ்டமான சம்பவத்துக்கு நான்தான் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். கௌரவமான ஆசிய ஜென்டில்மேனாக, என் தவறுக்கு அதிகபட்ச தண்டனையை எனக்கு நானே அளித்துக் கொள்கிறேன்.

உங்கள் உண்மையுள்ள,

தே சியங் வான்

என்று எழுதிய வான், தனக்கு தானே அளித்துக் கொண்ட அதிகபட்ச தண்டனை மரண தண்டனையாகும்.

அவரது மரணம் சிங்கப்பூர் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம் என்ற அதிதீவிர பயம் அனைவரையும் தொற்றிக் கொண்டது. ஒரு அமைச்சரே ஊழலில் சிக்கி தற்கொலை செய்து கொண்டார் என்ற அந்த செய்தி, ஊழல் பற்றிய சிந்தனையை வேரோடு அழைத்தது. இன்று சிங்கப்பூர் தலைநிமிர்ந்து நிற்க புதன் புள்ளியாய் அமைந்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts