பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) விமானி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசர அவசரமாக தான் இயக்கிய விமானத்தை தரையிறங்கிய பிறகு, தனது பணி நேரம் முடிந்துவிட்டது என்று கூறி மேலும் அதற்கு மேல் பறக்க மறுத்துவிட்டார். தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் அளித்த தகவலின்படி, PK-9754 என்ற அந்த விமானம் ரியாத்தில் இருந்து புறப்பட்டு இஸ்லாமாபாத் வரை பறக்கவிருந்தது. இருப்பினும், மோசமான வானிலை காரணமாக விமானி அந்த விமானத்தை அருகில் இருந்த சவுதி அரேபியாவில் உள்ள தம்மம் என்ற விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
இருப்பினும் அவசர அவசரமாக தரையிறங்கிய பிறகு விமானி மேலும் பறக்க மறுத்ததால் அங்கு சிக்கல் ஏற்பட்டது. பெயர் குறிப்பிடப்படாத அந்த விமானி தனது பணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி, மேற்கொண்டு விமானத்தைத் தொடர மறுத்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், விமானத்தில் இருந்த பயணிகள் விமானத்தில் இருந்து இறங்க மறுத்து, தங்கள் பயணம் தாமதமானதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நிலைமை மேலும் பதட்டமானதால், அதை கட்டுக்குள் கொண்டு வர தம்மாம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.
இறுதியாக, சிக்கித் தவிக்கும் பயணிகள் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்திற்கு தங்கள் பயணத்தைத் தொடரும் வரை அங்கிருந்த ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். ஒரு விமானம் இயக்கப்படுவது என்பது பல உயிர்கள் சம்மந்தப்பட்ட விஷயம். ஆகையால் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒரு விமானி ஓய்வெடுக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆதலால் அந்த விமானியை குறைசொல்வதில் எந்தவித பயனும் இல்லை. இறுதியாக அனைத்து பயணிகளும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு வந்துவிடுவார்கள் அதுவரை பயணிகளுக்கு ஹோட்டல்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்று பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தி கல்ஃப் நியூஸ் மூலம் தகவல் தெரிவித்தார்.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் என்பது பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமாகும். கடந்த ஆண்டு நவம்பரில் சவுதி அரேபியாவிற்கு தனது விமானச் செயல்பாடுகளை விரிவுபடுத்தியதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல இதுபோன்ற நிகழ்வு நடப்பது இது முதல்முறை அல்ல, கடந்த ஆண்டு நவம்பரில், எஞ்சின் செயலிழந்ததால், அயர்லாந்தின் டப்ளினில் அமெரிக்கா செல்லும் விமானம் அவசரமாக தரையிறங்கியதால், டஜன் கணக்கான மக்கள் ஐரோப்பாவில் சிக்கித் தவித்தனர்.