TamilSaaga

குடும்பத்துக்கே சொல்லாமல் புதைக்கப்பட்ட தமிழக ஊழியர்.. 30 நாட்களுக்கு பிறகு இ-மெயில் அனுப்பிய தூதரகம் – உடலை மீட்டுத் தர போராடும் மனைவி

தமிழகத்தில் மதுரை மாவட்டம் கள்ளந்திரி அருகே தொப்புலன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. வயது 42. இவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு, அதாவது கடந்த மார்ச் 9ம் தேதி, கம்பி கட்டும் தொழில் செய்வதற்காக இவர் சவுதி அரேபியா சென்றிருக்கிறார். இவருக்கு பேசப்பட்ட மாதம் சம்பளம் 20,000 ரூபாய் மட்டுமே. குடும்ப கஷ்டத்துக்காக இந்த சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு போயிருக்கிறார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக கடந்த மே 19-ம் தேதியே ஆண்டிச்சாமி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதன் பிறகு அவர் வேலைப்பார்த்த நிறுவனம் மூலம் குடும்பத்தினருக்கு மறுநாள் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது, மே 20-ம் தேதி காலை சொல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவருடைய உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்காக அன்று மதியமே மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஆண்டிச்சாமி மனைவி வேட்டச்சி மனு அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உயிரிழந்தவரின் உடலை கொண்டு வருவதற்கு வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் மறுவாழ்வு இயக்குநரகத்திற்கு மனு அனுப்பினார்.

இதற்கிடையே சவுதி அரேபிய தூதரகம் மூலம் ஆண்டிச்சாமி குடும்பத்துக்கு ஜூன் 20ம் தேதி மெயில் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், இந்திய தூதரகத்தின் அனுமதியுடன் உடல் சவுதியில் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியடைந்து. இதையடுத்து, கணவரின் உடலை உடனடியாக கொண்டு வருவதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குடும்பத்தினருடன் மனைவி வேட்டச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தார்.

மேலும் படிக்க – பொண்ணு சிங்கப்பூர்.. மாப்பிள்ளை இங்கிலாந்து.. கல்யாண செலவுக்கு கொள்ளையடித்து பணம் சேகரிக்க முயற்சி – ‘உண்மை’ அறிந்து மனம் இறங்கிய நீதிபதி!

பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “என் கணவர் சவுதி அரேபிராயவில் வேலை கிடைத்துவிட்டதாக கிளம்பி சென்றார், உயிரிழப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல் நிலை சரியில்லாமல் தன் அறையில் இருப்பதாக கூறினார், தற்போது அவர் இறந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையிலும் உடல் இன்னும் கொண்டு வரப்படவில்லை, உடனே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து உடலை ஒப்படைக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, ஆண்டிச்சாமியின் உறவினர் சின்னா என்பவர் பேசுகையில், “மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த 2 நாட்களில், சவுதி அரேபிய தூதரகம் இ- மெயில் மூலம் தொடர்பு கொண்டு, இங்குள்ள ஏஜென்ட் தொடர்பு எண்ணையும் அங்குள்ள மேற்பார்வையாளர் தொடர்பு எண்ணையும் கேட்டறிந்து அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்துவிட்டதாகவும், விமான பயணச்சீட்டு வந்த பின் உடலை அனுப்புவதாக கடந்த ஜூன் 19ம் தேதி தெரிவித்தனர். ஆனால், 20-ம் தேதி உடல் அடக்கம் செய்யப்பட்டதாக இ – மெயில் வந்தது, எனவே உடலை விரைந்து கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையடுத்து நியூஸ் 18 ஊடகம் சார்பில், ஏஜென்ட் மதுரைவீரனை தொடர்புகொண்டு பேசிய போது, “இங்கிருந்து பல பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள், எதிர்பாராத விதமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் உடலை மாற்றி அடக்கம் செய்திருக்கலாம், இந்திய தூதரகம் கவனக்குறைவால் தான் இன்று வரை உடல் கொண்டு வர தாமதமாகிறது, உயிரிழந்தவரின் உடலை கொண்டு வர பல முயற்சி மேற்கொண்டு வருகிறேன்” என்று தெரிவித்தார்.

குடும்ப கஷ்டம் என்கிற ஒரே காரணத்துக்காக எல்லா சுக துக்கங்களையும் மறந்து கடல் கடந்து வெளிநாடு சென்று உழைக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத இறப்பு என்பதே சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தின் ஒட்டுமொத்த கனவையும் சிதைத்துவிடும். அதிலும், இறந்த உடலை மீட்டு இந்தியா கொண்டு வரவே இவ்வளவு போராட்டம் தேவை என்றால், என்னத்த சொல்ல!

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts