உலக அளவில் இரண்டு ஆண்டுகளாக நம்மை உடலாலும் மனதாலும் நோகடிக்கும் இந்த நோய் புதுப்புது உருவெடுத்து நம்மை கலங்கடித்து வருகின்றது. இந்நிலையில் இந்த பெருந்தொற்றால் பல மாற்றங்கள் நமது வாழ்க்கையில் வந்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த “Work From Home”, ஏற்கனவே பல ஆண்டுகளாக IT நிறுவனங்களில் இந்த முறையில் பணி செய்யும் நிலை இருந்து வந்தாலும் இந்த பெருந்தொற்று அதை பன்மடங்கு உயர்த்தியுள்ளது என்றே கூறவேண்டும். சுமார் 2 ஆண்டுகளாக வீட்டிற்குள் முடங்கி வேலைசெய்து வருகின்றனர் பலர். சிலருக்கு இந்த WFH வரமாகவும் உள்ளது அதே சமயம் சாபமாகவும்வுள்ளது.
இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்ட பணிப்பெண்”
இந்நிலையில் Omicron தலைதூக்கி வரும் இந்த நேரத்தில் பல IT நிறுவனங்கள் மீண்டும் தங்களது பணியாளர்களை அலுவலகத்திற்கு வர உத்தரவிட்டு வருகின்றன. ஊழியர்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அலுவலம் சென்று வருகின்றனர். இந்த நிலையில் தான் பிரபல ஆப்பிள் நிறுவனம் இந்த WFH குறித்து தங்களுடைய நிலைப்பாட்டை கூறியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் கார்ப்பரேட் ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டிய தேதியை தற்போது காலவரையின்றி தாமதப்படுத்தியுள்ளோம் என்று அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கடந்த புதன்கிழமை ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார். தி வெர்ஜ் நிறுவனத்தால் பெறப்பட்ட கடிதத்தில், நிறுவனத்தின் வேலைக்குத் திரும்புவதற்கான தேதி “இன்னும் தீர்மானிக்கப்படவில்லை” என்றும், மேலும் அவர் அனைத்து ஊழியர்களையும் தடுப்பூசி மற்றும் பூஸ்டரைப் பெற ஊக்குவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் “எங்கள் அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன, கிரேட்டர் சீனா மற்றும் பிற இடங்களில் உள்ள எங்கள் டீம் உட்பட எங்கள் சக ஊழியர்கள் பலர் தவறாமல் அலுவலகத்திற்கு வருகிறார்கள்” என்று குக் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார். “எங்கள் பல டீம்கள் மீண்டும் ஒன்றாக இருப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம், ஆனால் உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் நாங்கள் தொடர்ந்து முடிவுகளை எடுப்போம், அதேபோல எந்தவித மாற்றமாக இருந்தாலும் நிச்சயம் அதை உங்களுக்கு குறைந்தது நான்கு வாரங்களாவது முன்கூட்டியே தெரிவிப்போம் என்றார்.
அதேபோல ஆப்பிள் நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் $1,000 வழங்குவதாக குக் புதன்கிழமை அறிவித்தார். “இந்த நிதி நீங்கள் வீட்டில் இருந்து பணிசெய்யும் நேரத்தில் உங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றார் அவர். ஆப்பிள் செய்தித் தொடர்பாளர் நிக் லீஹி தி வெர்ஜுக்கு $1,000 போனஸை உறுதிசெய்து, சில்லறை வணிகத் தொழிலாளர்கள் உட்பட ஒவ்வொரு ஆப்பிள் ஊழியருக்கும் இது பொருந்தும் என்று கூறினார்.