TamilSaaga

அவ்வளவு அடி வாங்கியும்… பொறுமையாக இருந்ததற்காக இன்று சிங்கப்பூர் மக்களே வாழ்த்தும் வெளிநாட்டு ஊழியர் “சுரேஷ் பெருமாள்” இவரே! சல்யூட்!

சிங்கப்பூரில் கடந்த ஜுலை 4ம் தேதி இரவு சுமார் 10.20 மணியளவில் டாம்பைன்ஸ் ரீடெய்ல் பூங்காவில் உள்ள ஜெயிண்ட் ஹைபர்மார்ட்-ன் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் பெருமாள் பணியில் ஈடுபட்டிருந்தார். பாதுகாப்புக்கான நிர்வாக நடவடிக்கைகளின்படி கட்டிடத்திற்குள் நுழையும் மக்கள், மாஸ்க் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டியது தான் அவரது பணி.

இந்நிலையில், மாஸ்க் அணியாமல் அங்கு வந்த நபர் ஒருவரை சுரேஷ் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு சுரேஷை மிக மோசமான ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த அந்த நபர், திடீரென பணியில் இருந்த சுரேஷை பிடித்துத் தள்ளி, குத்துச் சண்டை வீரரைப் போல தாக்கவும் தொடங்கினார். இதனால், சுரேஷுக்கு காயங்கள் ஏற்பட்டதாக சிங்கப்பூர் பாதுகாப்புச் சங்கம் அறிக்கை வெளியிட்டது

இந்த சம்பவம் தொடர்பாக, மனநலச் சட்டத்தின் கீழ் 57 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது. இந்நிலையில், தற்போது ஊழியர் சுரேஷ் பெருமாள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுரேஷ், மலேசியாவில் செட்டிலாகி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இப்போது பணியாற்றுவது சிங்கப்பூரில் தான். 10, 13 மற்றும் 15 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவியும் மலேசியாவில் உள்ளார்.

மேலும் படிக்க – புது டிரஸ்.. புது ஷூ.. மரணத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட “கடைசி Photo”… தூக்கு மேடைக்கு முன்பு சொன்ன “கடைசி வார்த்தை” – சிங்கப்பூரில் இன்று தூக்கிலிடப்பட்ட இந்திய வம்சாவளி இளைஞர்!

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து சுரேஷ் அளித்துள்ள பேட்டியில், “அந்த சம்பவம் குறித்து என் மனைவி கவலைப்படுகிறார். என்னை இன்னும் கவனமாக இருக்கச் சொன்னார். அவர் அடித்த போது என்னால் திருப்பி அடித்திருக்க முடியும். ஆனால் நான் ஒரு பாதுகாவலர் என்பதால் என்னால் பேசவோ சண்டையிடவோ முடியவில்லை, மேலும் எனது கடமையை நான் செய்ய வேண்டும. அவர் என்னை விட உயரத்தில் சிறியவராக இருந்தார். அதனால் அவருடைய சில குத்துக்களை என்னால் தடுக்க முடிந்தது.

எனது வேலையின் ஒரு பகுதி தான் இது. பரவாயில்லை. இப்படி மீண்டும் எனக்கு நடந்தாலும், நான் அமைதியாகவே இருப்பேன்” என்றார்.

சுரேஷ் பெருமாளின் உயரம் 170cm. எடை 90 கிலோ. இவரோடு ஒப்பிடுகையில் அந்த 57 வயது நபர் ஒரு மடு தான். ஆனால், தன் வேலைக்காக அத்தனை அடியையும் சுரேஷ் வாங்கியுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகளைத் துன்புறுத்துபவர்கள், தாக்குபவர்கள் அல்லது காயப்படுத்துபவர்களுக்கான தண்டனைகள் மே மாதத்தில் அதிகரிக்கப்பட்டன. ஒரு பாதுகாப்பு அதிகாரியை தானாக முன்வந்து காயப்படுத்துபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts