கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். குறிப்பாக இந்த பெருந்தொற்று இருந்த காலத்தில் வீட்டில் அனைவரும் முடங்கி இருந்த நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை இன்னும் அதிகரித்து உள்ளது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள் அந்த பெண்களின் மிக நெருங்கிய உறவினர்கள் மூலமாகவே சில சமயங்களில் அவர்களுக்கு அளிக்கப்படுவது வருத்தத்திற்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் பலர் பாலியல் கொடுமைகளை பற்றி அனுதினமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அரசும், பாலியல் குற்றங்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அளித்துவரும் வேளையிலும் தினமும் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் அண்டை நாடான இந்தியாவில் உள்ள தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் என்ற பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி ஒருவருக்கு அவருடைய தூரத்து சொந்தக்காரரான மோகன்ராஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அந்த இளம் பெண்ணுக்கு மோகன்ராஜ் அண்ணன் முறை என்று கூறப்படுகிறது, இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமி குளித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு தெரியாமல் சிறுமியை படமெடுத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று கூறி மிரட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மோகன்ராஜ் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் மோகன்ராஜ், அவரது தந்தை, தாயார் மற்றும் அவரது தம்பி ஆகிய அனைவரும் இணைந்து சிறுமியை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மனமுடைந்து போன அந்த சிறுமி சில தினங்களுக்கு முன்பு அரளி விதையை அரைத்துக் குடித்து அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து உள்ளார்.
மயங்கிய நிலையில் சிறுமியை மீட்டு அவரது குடும்பத்தினர் திடுக்கிட்டுப் போய் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்பொழுது நல்ல உடல் நிலையுடன் சிறுமி தேறிவரும் நிலையில் அவரது குடும்பத்தார் நன்னிலம் காவல் நிலையத்தில் மோகன்ராஜ் மற்றும் அவர் உறவினர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.
மோகன்ராஜ் தந்தை தனிக்கொடி, அவருடைய தாயார் சாந்தி மற்றும் தம்பி பாக்யராஜ் ஆகியோர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். போலீசில் புகார் கொடுக்கப்பட்ட அடுத்த நாள் மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைகினார்.
நான்கு நாட்கள் கழித்து மோகன் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தாரை போலீசார் தேடி வருகின்றனர்.