கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு ரூ.25 லட்சம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது அதனால் வரி தொடர்பான வழக்கில் அபராதம் கட்ட விருப்பமில்லை என்று நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
2012-ல் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதில், 9 ஆண்டுகளுக்குப்பிறகு மனுவின் மீதான தீர்ப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.இந்த செய்தி அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்த வழக்கில் தீர்ப்பு வெளியான போது நீதிபதி குறிப்பிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ரியல் ஹீரோக்களாக இருக்கவேண்டும் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என்று கடுமையாக சாடியதோடு, நடிகர் விஜய்யின் வரி விலக்குமனுவை தள்ளுபடி செய்தார். அதோடு,1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, அபராதத் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தவிட்டார்.
தனது மனு மீதான தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, நடிகர் விஜய் கடந்த ஜூலை 17ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று தனி நீதிபதி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரூ.1 லட்சம் அபராதத்தை ஏன் நிவாரணமாக வழங்கக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் தரப்பு ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்று ஐகோர்ட்டில் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் கொடுத்துவிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.