TamilSaaga

“முன் அனுமதி பெற்றவர்களுக்கும் சிங்கப்பூரில் நுழைய தடை” : 7 நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்த MOH

பல ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த பிராந்தியத்தில் பரவும் பெருந்தொற்று வைரஸின் தொற்று மாறுபாடு பற்றிய அறிக்கைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. போட்ஸ்வானா, ஈஸ்வதினி, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கான சமீபத்திய பயண வரலாற்றைக் கொண்ட அனைத்து பயணிகளும் நாளை சனிக்கிழமை இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்குள் நுழையவோ அல்லது பயணிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று MOH இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 14 நாட்களில் அந்த நாடுகளில் இருந்தவரை சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன் அனுமதி பெற்றவர்களுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் பிரத்யேக வசதிகளில் 10 நாட்கள் தங்கியிருப்பதற்கான அறிவிப்பை வழங்க வேண்டும். பெருந்தொற்றின் B.1.1.529 எனப்படும் புதிய மாறுபாடு, இந்த ஏழு நாடுகளில் புழக்கத்தில் இருக்கலாம் என்றும், உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இன்னும் இதைப் பற்றி மேலும் கண்டுபிடித்து வருகின்றனர் என்றும் MOH தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் தற்போது இந்த மாறுபாட்டின் வழக்குகள் எதுவும் இல்லை, என்று அமைச்சகம் மேலும் கூறியது.

மேற்குறிப்பிட்ட ஆறு நாடுகளைப் போலவே தென்னாப்பிரிக்காவும் வகை IV-க்குள் சேர்க்கப்படும். தற்போது இது வகை II நாடு ஆகும், அதாவது அங்கிருந்து வரும் பயணிகள் தங்களுடைய அறிவிக்கப்பட்ட தங்குமிடங்களில் ஏழு நாள் தங்கும் அறிவிப்புக்கு உட்பட்டுள்ளனர். MOH இந்த கூடுதல் எல்லைக் கட்டுப்பாடுகள் முதல் நிலையாக நான்கு வாரங்களுக்குப் பொருந்தும், அதன் பிறகு அது மதிப்பாய்வு செய்து தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை நீட்டிக்கப்படும்.

Related posts