சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் (UK) இடையே டிஜிட்டல் பொருளாதார ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன. இந்த UK – சிங்கப்பூர் இடையிலான ஒப்பந்தம் (UKSDEA) ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதல் ஒப்பந்தமாகும்.
சிங்கப்பூர் மற்றும் UK இடையே இந்த ஒப்பந்தத்தின் மூலம் டிஜிட்டல் முறையிலான வணிகம் எளிதாக்கப்படும். இதனால் இந்த இரு நாடுகளின் பிராந்தியங்கள் டிஜிட்டல் வர்த்தகத்தை எளிதாக்கவும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தவும் இந்த UKSDEA ஒப்பந்தம் வழிவகை செய்யும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் இன்போகாம் ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதை பற்றி வர்த்தக உறவுகள் துறை அமைச்சர் திரு.ஈஸ்வரன் “எல்லை தாண்டிய தரவுகளின் ஓட்டத்தில் நம்பகத்தன்மையோடு இயக்குவதற்கும், தரவுகள் உள்ளூர் மயமாக்கல் நிலையை தடுக்கவும், பாதுகாப்பு மற்றும் உயர் தரத்தை உறுதி செய்வதற்கான விதிகளை நிறுவுவது இந்த ஒப்பந்ததில் அடங்கும்” என கூறியுள்ளார்.
மேலும் “டிஜிட்டல் பொருளாதாரம் என்பது இந்த கோவிட்-19 தொற்று சூழலிலும் நெகிழக்கூடிய பிரகாசமான ஒரு வாய்ப்பாக உள்ளது” என கூறியுள்ளார்.
“UKSDEA டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தம் வர்த்தக வேகத்தை அதிகரிக்கும், மக்களின் நம்பகத்தன்மை, நலன்கள் மற்றும் வலிமையான சந்தைகளை ஊக்குவிக்கும்” எனவும் திரு.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் மற்றும் UK இரண்டும் ட்ஜிட்டல் வர்த்தகத்தில் உலகத் தலைவர்கள். 2019ஆம் ஆண்டில் UK தனது 70% சேவைகளை சிங்கப்பூருக்கு வழங்கியுள்ளது. அதன் மதிப்பு சுமார் S$ 6 பில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிங்கப்பூர் இது போன்ற டிஜிட்டல் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுடன் கையெழுத்து இட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.