SINGAPORE: VTL மற்றும் குறைந்த ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும், இனி சிங்கப்பூருக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் “அதிகாரிகளின் மேற்பார்வையின்றி” ஆன்டிஜென் ரேபிட் சோதனையை (ART) விரைவில் மேற்கொள்ள முடியும்.
இந்த புதிய விதி வரும் செவ்வாய்கிழமை (மார்ச் 15) முதல் அமலுக்கு வருகிறது என்று சுகாதார அமைச்சகம் (MOH) இன்று (மார்ச்.11) தெரிவித்துள்ளது.
அதாவது, புரியும் படி சொல்லவேண்டுமெனில், இத்தனை நாட்களாக சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு பயணிகள் அதிகாரிகளின் மேற்பார்வையில் தான் ART சோதனை எடுக்க முடியும். இப்போது புதிதாக MOH வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பயணிகள் தாங்களாகவே சுயமாக இந்த சோதனையை எடுத்துக் கொள்ளலாம்.
வெளிநாட்டு பயணிகளால் ஏற்படும் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதன் எண்ணிக்கை, மொத்த தினசரி நோய்த்தொற்றுகளில் 1 சதவீதம் மட்டுமே உள்ளது என்பதால் இந்த தளர்வு அளிக்கப்படுவதாக MOH குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை சீனா, மக்காவ் மற்றும் தைவான் போன்ற குறைந்த தொற்று விகிதங்களைக் கொண்ட பகுதிகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பொருந்தும்.
சிங்கப்பூர் VTLகள் உள்ள ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களில் இருந்து வரும் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கும் இது பொருந்தும்.
சிங்கப்பூர் வரும் பயணிகள் இங்கு தங்களுடைய பணிகளை தொடர்வதற்கு முன், இந்த இணையதளத்தில் மேற்பார்வை செய்யப்படாத self-swab ART சோதனை முடிவை அவர்களாகவே பதிவு செய்ய வேண்டும்.
சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்குள், pre-departure ART அல்லது PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று MOH தெரிவித்துள்ளது.