சிங்கப்பூரில் உள்ள தஞ்சங் பஹார் என்னும் இடத்தில் பழைய கட்டிடத்தை இடித்து சீரமைக்கும் பணியானது நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜூன் 15ஆம் தேதி கட்டிடத்தின் கான்கிரீட் சுவரானது இடிந்து விழுந்து 20 வயது இளைஞர் ஈடுபாடுகளில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தி கிடைத்தது.
அன்று இரவு முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற்ற 8 மணி நேர மீட்பு பணிகளுக்கு பிறகு இளைஞரின் உடலானது மீட்கப்பட்டது. இறந்த இளைஞர் இந்தியாவை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற தகவல் இதுவரை கிடைக்காமல் இருந்தது.
இதனை ஒட்டி இறந்த இளைஞர் தற்பொழுது தஞ்சாவூரை சேர்ந்தவர் என்ற தகவல் கிடைத்துள்ளது. இவரது பெயர் வினோத் குமார் ஆகும். இதுகுறித்து சிங்கப்பூரின் மனிதவள அமைச்சர் இரங்கல் செய்தியை அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“வினோத் குமாரின் குடும்பத்தினருக்கும், அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் வேலை இட பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இது ஒரு உயிர் சம்பந்தப்பட்டது என்பதால் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது”என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மனித வள துறையின் மூத்த அமைச்சர் சாஹி முகமது என்பவர் உயிரிழந்த வினோத் குமாரின் குடும்பத்திற்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேஸ்புக்கில் குறிப்பிட்டதாவது “மனிதவள அமைச்சகம் விபத்து தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் உள்ள அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட பிறகே மேற்கொண்டு பணியானது தொடரப்படும். மேலும் பணி செய்யும் ஊழியர்களும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
பாதுகாப்பற்ற இடத்தில் வேலை செய்ய நேரிட்டால் சூப்பர்வைசர்கள், மனிதவள அமைச்சகம் மற்றும் தொழிற்சங்க தலைவர்களை தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.