கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி, சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக கூறி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (25) என்ற இளைஞர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. அவர் அக்கட்சி தொடர்பான பணிகளில் ஈடுபட்டதனால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதாக சிங்கப்பூர் போலீஸ் சார்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இனி ஆயுள் முழுக்க அவர் சிங்கப்பூருக்குள் நுழைய தடையும் விதிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் வருமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் உதவியாளர் செந்திலிடம் நமது Tamil Saaga சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறுகையில், “இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் எங்களுக்கு கிடைக்கவில்லை. முதலில் சிங்கப்பூரில் நாம் தமிழர் அமைப்பே கிடையாது. அப்படியிருக்கும் போது, எப்படி ஒருவர் அங்கே கட்சிப் பணிகளில் ஈடுபட்டார் என்று கூறுகிறார்கள் என புரியவில்லை. எங்களுக்கே இன்னமும் இதுகுறித்த முழுமையான தகவல் கிடைக்கவில்லை. குமார் என்று சொல்லப்படும் அந்த இளைஞரின் புகைப்படமோ, அவரைப் பற்றிய வேறு எந்த தகவலோ கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தால் நிச்சயம் பகிர்கிறோம்” என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
திருத்துறைப்பூண்டி அருகே இடையூறை சேர்ந்தவர் செல்வமணி, இவருடைய மகன் தான் குமரேசன். கடந்த 3 ஆண்டுகளாக சிங்கப்பூரில் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். மேலும் இவர் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார். சிங்கப்பூரில் தான் ஏன் கைது செய்யப்பட்டேன் என்பது குறித்து தற்பொழுது தாயகம் திரும்பியுள்ள குமரேசன் “விகடனுக்கு” அளித்த பிரத்தியேக இணைய வழி பேட்டியில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது “சிங்கப்பூரில் நான் மாவீரர் நாள் கொண்டாடினேன் என்று கூறி சிங்கப்பூர் போலீசார் என்னை கைது செய்தனர். மேலும் என் கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படம் இருந்ததாகவும் அவர்கள் கூறினார்கள். இதுபோன்று செய்ய உங்களுக்கு யார் அனுமதி அளித்தது என்று சிங்கப்பூர் போலீசார் என்னிடம் கேட்டபோது நான் தமிழகத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக இருக்கிறேன் என் தலைவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தினை ஆதரிக்கிறார் அதனால் நானும் ஆதரிக்கிறேன் என்று கூறினேன்”.
அதனால் தான் நான் மாவீரர் நாள் கொண்டாடினேன் என்றும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். உடனே LTTEயை உங்கள் தலைவர் ஆதரிப்பதனால் நீங்களும் அவர்களுக்கு ஆதரவு தருக்குறீர்கள் என்று தான் அர்த்தம் என்று கூறினார்கள். ஆறு நாட்களில் சிங்கப்பூர் சிறையில் இருந்தேன் இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நான் இந்த வருடமும் மாவீரர் நாள் கொண்டாடவேயில்லை, சென்ற ஆண்டும் மாவீரர் நாள் கொண்டாடவில்லை இறுதியாக கடந்த 2019ம் ஆண்டு மாவீரர்நாள் கொண்டாடினோம். அதுவும் என்னுடைய அறையில் சிறிய மெழுகுவர்த்தி வைத்து பிரபாகரனின் புகைப்படத்தை வைத்து கொண்டாடினோம்.
அதை என் நண்பர் யாரோ ஒருவர் இணையத்தில் பதிவிட, இந்த பிரச்சனை நேர்ந்துள்ளது, ஒரு சாதாரண நிகழ்வுக்காக நான் தண்டிக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கின்றது என்றார் அவர்.