சிங்கப்பூரில் சமீபத்தில் ஒரு பெண் சாலையில் உயிருக்காக போராடிய புறாவைக் காப்பாற்றுவதற்காக நெரிசலான சாலை போக்குவரத்தை தைரியமாக எதிர்கொண்டுள்ளார். கடந்த மார்ச் 23ம் தேதி நடந்த இந்த சம்பவத்தை ஒருவர் TikTokல் பதிவேற்றி அவரை உண்மையான Heroine நீங்க தான் என்று குறிப்பிட்டுள்ளார். காயப்பட்டு கீழே விழுந்த அந்த புறா நெரிசலான அந்த சாலையில் இருந்து தப்பிக்க முடியாமல் தவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியான அந்த வீடியோவில் சில கார்கள் அந்த புறாவை கடந்த செல்வத்தையும் நம்மால் பார்க்கமுடிகிறது, ஒரு கட்டத்தில் சிறகுகளை அசைப்பதை நிறுத்திய அந்த புறா செய்வதறியாது சாலையின் நடுவே கிடந்தது. அந்த நேரத்தில் தான் தேவதை போல பெண் ஒருவர் அந்த புறாவுக்கு உதவி செய்ய வந்துள்ளார்.
கடுமையான நெரிசல் கொண்ட போக்குவரத்தில் ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைக்க சாலையின் குறுக்கே தனது கைகளை முன்னோக்கி நீட்டிக்கொண்டு அந்த புறாவை அணுகினார் அந்த பெண் தேவதை. அவர் செல்வதை பார்த்தது மேலும் இருவர் உதவிக்கு வர, சாலையின் நடுவில் இருந்து அந்த புறாவை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசென்றனர்.
இணையத்தில் வைரலான இந்த வீடியோவை பார்த்த பலர் அந்த பெண்ணை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதே சமயத்தில் புறாவை காப்பாற்றுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உங்களுடைய பாதுகாப்பும் ரொம்பவும் முக்கியம் என்றும் பலரும் அந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ளனர்.