வரும் நவம்பர் 1, 2021 முதல், வேலை பாஸ் வைத்திருப்பவர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் மற்றும் மாணவர் பாஸ் பெற்றவர்கள் அனைவரும் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பு முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று நேற்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை “தேவையான” தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் சிங்கப்பூருக்குள் வரும்போது “பாதுகாப்பான மற்றும் அளவீடு செய்யப்பட்ட முறையில் பொது சுகாதார அபாயத்தைக் குறைக்கும்” என்று பணிக்குழு (MTF) அமைச்சகம் நேற்று அக்டோபர் 2 அன்று அறிவித்தது.
கூடுதலாக, அக்டோபர் 6, இரவு 11:59 முதல், வகை III மற்றும் IV நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தங்குமிட அறிவிப்பு காலம் (SHN) 14 முதல் 10 நாட்களாகக் குறைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூருக்குள் நுழையும்போது தடுப்பூசி நிலை சரிபார்க்கப்பட வேண்டும்
நுழைவு அனுமதி பெற்ற பாஸ் வைத்திருப்பவர்கள், விமான நிறுவனங்கள், படகு ஆபரேட்டர்கள் அல்லது சிங்கப்பூருக்கு வந்தவுடன் சோதனைச் சாவடியில் செக் செய்யும்போது, தங்களுக்கு முழு தடுப்பூசி போடப்பட்டதை நிரூபிக்க அவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தடுப்பூசியின் சரியான ஆதாரத்தை சமர்ப்பிக்க இயலாதவர்களுக்கு முன் விலக்குகள் வழங்கப்படாவிட்டால், போர்டிங் அல்லது அவர்களுது நுழைவு மறுக்கப்படும்.
WHO EUL பரிந்துரை செய்த தடுப்பூசியின் இரண்டு டோஸ் எடுத்துக்கொண்டவர்கள் முழுமையான டோஸ் எடுத்த 14 நாட்கள் கழித்தே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக கருதப்படுவார்கள். 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட தடுப்பூசி போடப்படாத நபர்கள் தடுப்பூசி சான்று இல்லாமல் சிங்கப்பூருக்குள் நுழையலாம். ஆனால் அவர்கள் பெருந்தொற்று நெகடிவ் சான்றிதழ் அளிக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.