TamilSaaga

“மனித வாழ்வில் உறவுகளுக்கும் தேவை ஒரு விவாகரத்து” : ஆரா அருணாவின் பக்கங்கள்

மனித வாழ்வில் உறவுகள் ஏறக்குறைய ஒரு அத்தியாவசிய தேவையாகவே கருதப்படுகிறது. சில உறவுகள் பிரியாதவை ! பிரிக்க முடியாதவை ! வேறு சில உறவுகளோ பிரிக்கக் கூடாதவை ! இது நம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்று தான். ஆனால் நான் உங்கள் ஆரா அருணா இந்தப் பக்கத்தில் பதிவு செய்ய விரும்புவது பிரிய வேண்டிய சில உறவுகளைப் பற்றியும் ! அதற்கான கால நேரம் பற்றியும் தான் !

எல்லாவற்றிற்கும் இருக்கிறது ஒரு காலாவதியாகும் காலம் ! அந்தக் காலத்திற்குப் பிறகும் பயன்படுத்தப்படும் எந்தப் பொருளும் இழப்பையே உருவாக்கும். பொருட்களே அப்படி என்றால் சில உறவுகளும் அப்படித்தான் ! உறவுகளுக்கும் இருக்கிறது காலாவதி காலம் ! அதற்கு பிறகும் அந்த உறவை நீட்டிக்க விரும்பினால், விளைவதெல்லாம் வீண் வருத்தங்களும், காலத்தால் கூட ஆற்ற முடியாத மரண காயங்களுமே! அப்படி அந்த காலாவதி காலத்திற்கு முன்பே அந்த உறவுகளை சுமுகமாக பிரிந்து விட்டால், உறவுகளைத் தொலைத்தாலும் குறைந்தபட்சம் உள்ள அமைதியையாவது காத்துக் கொள்ளலாமே…!!! சரிதான், எப்போது ஒரு உறவை பிரியவேண்டிய உறவாக கருதுவது ? அதை எப்படி கண்டுபிடிப்பது ? எனும் கேள்வியோடு தொடர்ந்து வாசியுங்கள்.

ஒரு தனிமனிதரின் முழுமையான நல்வாழ்வுக்கு உறவுகள் மிகவும் இன்றியமையாதவை.அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளின்படி இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இதய நோய்களுக்கான அபாயங்களை குறைக்கவும், மனச்சோர்வில் இருந்து ஒருவரை காப்பாற்றவும், ஏன் நன்றாக தூங்கவும் கூட, நல்ல உறவுகளின் உடனிருப்பு மிகவும் தேவையான ஒன்றாக கருதப்படுகிறது.

காலாகாலமாக பழகிய ஒருவரை, ஒரு உறவைப் பிரிவது என்பது யாரும் எளிதில் எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றுதான். ஆனால் என்றைக்கு அந்த உறவு உங்களுக்கு மன காயத்தையும், கண்ணீரையும், எதிர்மறை உணர்வுகள், அனுபவங்களையும் கொடுக்க ஆரம்பிக்கிறதோ, அறிந்து கொள்ளுங்கள் அது தான் அந்த உறவை முறித்துக் கொள்ள வேண்டிய நேரம்.

அந்த நேரம் குறித்த அறிகுறிகளை பட்டியலிட்டு இருக்கிறார்கள் மனோதத்துவ அறிஞர்கள் .உங்களுக்கு புரியும்படி அவற்றை இங்கே குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன்.

1) நீங்கள் எந்த வேலையில், எந்த சூழலில், இருந்தாலும் அவர்களுக்கு தேவைப்படும் போது உடனே போய் நிற்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு மிகும் போது..

2) மற்றவர்கள் முன்னால் உங்களை கேலி கிண்டல் செய்வது, உங்களைக் குறைத்துப் பேசுவது, உங்களுக்குப் பிடிக்காதவற்றை எல்லாம் செய்வது, இவையெல்லாம் செய்துவிட்டு அத்தனையும் விளையாட்டாக வேடிக்கைக்காக செய்தது என்று நியாயம் கற்பிக்கும் போது..

3) அவர்கள் எண்ணத்தில் எண்ணுவதெல்லாம் நீங்கள் அறிந்து செய்ய வேண்டும் என்பது, உங்களால் அது இயலாத பொழுது கோபம் அல்லது அதிக வருத்தப்படும் போது..

4) உங்கள் இருவர் சார்ந்த எல்லாவற்றிற்கும் இறுதி முடிவு அவர்களுடையதாக இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் போது..

5) துணிந்து உங்களிடம் நூறு சதவீதம் பொய் சொல்லும்போது..

6) மற்றவருடன் உங்கள் நட்பு, உறவு குறித்து அதிக பொறாமை அல்லது உடைமைத்தனத்தை ( Possessiveness ) வெளிப்படுத்தும் போது..

7) அவர்கள் உங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் தவறாக பயன்படுத்தும் போது (Abuse) அல்லது காயப்படுத்தும் போது..

8) உங்களுக்குள் இனி பொதுவானவை என்று எதுவுமே இல்லை என்ற நிலை வரும்போது..

நண்பர்களே யோசிக்காமல், தயங்காமல், தள்ளி வைத்து விடுங்கள் அந்த உறவை !

நான் மேற்சொன்ன இந்த காரணங்கள் எல்லாம் பொதுவாக பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் பிரித்து எடுக்கப்பட்டவை. இவைகளையும் தாண்டி உங்கள் ஒவ்வொருவருக்கும் இது போல் இன்னும் பல காரணங்களும், அனுபவங்களும் நினைவில் வந்து போகலாம் இப்போது.

உறவுகளே மோசம் ! உறவுகளே தேவை இல்லை ! என்பதல்ல என் வாதம். உங்களுக்கு எந்த வகையிலும் நன்மை செய்யாத, எல்லா வகையிலும் உங்கள் பயணத்தை தடை செய்கின்ற, உங்களை காயப்படுத்துகிற உறவுகளைத் தள்ளி வையுங்கள் என்கிறேன்.. தவறில்லையே.

உறவுகளைப் பிரியவும் துணிவின்றி,உறவோடு வாழவும் வழி இன்றி நரக வாழ்க்கை வாழ்வதும் அல்லது நாண்டு கொண்டு சாவதும் தினசரி செய்தியாகிப் போனதைப் பார்க்கையில் இப்படி தன்னை தானே தண்டித்துக் கொள்வதை விடுத்து ,கொஞ்சம் அந்த உறவை மட்டும் தள்ளி வைத்திருக்கலாம் இல்லையா என்று எத்தனை முறை நானும் நீங்களும் எத்தனை பேருக்காக உச்சுக் கொட்டி இருக்கிறோம்.!

சில ஆண்டுகளுக்கு முன்னாள் வாசித்த ஒரு ஆங்கில கட்டுரை இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.அந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு பேராசிரியர் உலகில் எந்த நாடுகளில் எல்லாம் அன்பு, காதல் தினசரி அதிகம் உணரப்படுகிறது என்பது குறித்து 136 நாடுகளில் ஆய்வு நடத்தி தன்னுடைய முடிவுகளை வரிசைப்படுத்தி இருந்தார்.அதில் உலகிலேயே அதிக அளவில் அன்பு,காதல் உணரப்படுவதாக 93% மதிப்பெண்களோடு முதலிடம் பெற்று இருந்தது Philippines.(அந்தக் கட்டுரைக்கு தலைப்பே- ‘ அன்பு , காதல் எங்கிருக்கிறது ? வேறு எங்கு பிலிப்பைன்ஸில் தான் ! ‘என்பது.. எனவேதான் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது ) 71% மதிப்பெண்களைப் பெற்று இந்தியா 69 ம் இடம் பிடித்திருந்தது.கடைசி இடம் பெற்றிருந்த நாட்டின் அன்பு சதவீதம் 29%.. இதை நினைவு கூர்ந்து சொல்ல விரும்புவது இதுதான்.. உறவுகள் தான் எல்லாமே.. உறவுகளை சம்பாதிப்பது மிகவும் கடினம் எனவே நாம் எவ்வளவு துன்பப்பட்டாலும் உறவுகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனும் எண்ணம் இருந்தால், தினசரி தேவைப்படும் அடிப்படை அன்பு உறவுகளே இல்லாமல் இவ்வளவு நாடுகளில் அவ்வளவு மக்கள் வாழும் பொழுது, நம்மை காயப்படுத்தும் ஒரு உறவை தள்ளிவைத்துவிட்டு நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர முடியாது எனும் கேள்வி எழுப்பத் தான்?

திருமணம் செய்து கொண்டோ அல்லது வேறு காரணத்தோடோ காணாமல் போன காதலன் அல்லது காதலியை, இறந்து போன அல்லது பிரிந்து போன உறவுகளை, அவர்களின் நினைவுகளை, அவர்கள் விட்டுச் சென்ற அனுபவங்களை மறக்க முடியாமல் சமூக ஊடகங்களில் வலி நிறைந்த பதிவுகளை பார்க்கும் பொழுதெல்லாம் என் மனம் எப்போதும் நினைப்பதுண்டு – இவர்கள் எப்போது இந்த சுமையை இறக்கி வைக்கப் போகிறார்கள் என்று.?

தாயே என்றாலும் தன்மானம் முக்கியம் இல்லையா !? தந்தையே என்றாலும் தன்மதிப்பு தேவையில்லையா !? உடன்பிறப்பே என்றாலும் உங்களுக்கு நீங்களும் முக்கியம் இல்லையா !?
நண்பரே என்றாலும் நம்பிக்கை தேவையில்லையா !? உறவுகளை என்றாலும் உயிர்ப்போடு இருப்பது முக்கியம் இல்லையா !?

அதனால்தான் சொல்கிறேன் நண்பர்களே அவ்வப்போது சில உறவுகளுக்கும் ‘GOOD – BYE ‘,’BREAK- UP ‘,’DIVORCE’ எல்லாம் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள் !

வந்தவர்கள் எல்லாம்
நிலைத்து விட்டால்
வாழ்க்கை கனத்துவிடும் ! போகட்டும் விட்டுவிடுங்கள்
சில உறவுகளையும்
சில நினைவுகளையும் !

உண்மை உறவோடு
உங்கள் ஆரா அருணா

Related posts