சிங்கப்பூரை பொறுத்தவரை பஸ் ஸ்டாண்டுகள்,எம் ஆர் டி ஸ்டேஷன்கள்,ஷாப்பிங் மால்கள் ஆகிய அனைத்திலும் மின்சார படிக்கட்டுகள் மட்டுமே உபயோகத்தில் இருக்கும். நம் நாட்டு மக்களுக்கு அது புதிதாக இருந்தாலும் அங்கிருந்து பழகியவர்களுக்கு அது ஒன்றும் பெரிதாக தெரியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மின்சார படிக்கட்டுகளை மிகவும் எளிதாக கையாளுவார். ஆனால் துரதிஷ்டவசமாக மூன்று வயது சிறுவனுக்கு அதில் சிக்கல் ஏற்பட்டது.
கேளாங்கில் உள்ள சிட்டி பிளாசா மாலுக்கு ஜனவரி 2ஆம் தேதி தனது பாட்டியுடன் வந்துள்ளான் அந்த சிறுவன். பாட்டியின் கையை பிடிக்காமல் விளையாட்டுத்தனமாக மின்சார படிக்கட்டில் கைப்பிடியைப் பிடித்து முதல் மாடிக்கு தனது பாட்டியுடன் சென்றான். அப்பொழுது திடீரென மின்சார படிக்கட்டு ஆனது பின்னோக்கி செல்லவும் சிறுவன் நிலை தடுமாறி விழுந்துள்ளான்.அதில் சிறுவனின் விரல் மின்சார படிக்கட்டில் மாட்டிக்கொண்ட பொழுது அவன் வலியால் துடித்துள்ளான்.
சிறுவனின் பாட்டி உடனடியாக கூச்சலிட கடையின் ஊழியர்கள் விரைந்து வந்து மின்சார படிக்கட்டை நிறுத்தினர். சம்பவம் பிற்பகல் இரண்டு பத்து மணிக்கு நடந்ததை அடுத்து உடனடியாக மின்சார படிக்கட்டு ஆனது நிறுத்தப்பட்டு சிறுவனுக்கு தேவையான முதலுதவிகள் அளிக்கப்பட்டன. அதன் பிறகு குடிமை தற்காப்பு படை விரைந்து செயல்பட்டு சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார படிக்கட்டானது பராமரிப்புக்கு பின்னர் நீண்ட நேரம் கழித்து திறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.