TamilSaaga

“அப்போ சிங்கப்பூரில் பல லட்சம் சம்பளம்” : இப்போ தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் – அசத்தும் தர்மபுரி தம்பதி

“சொர்கமே என்றாலும் அது நம்ம ஊற போல வருமா..”, தம்பி கங்கை அமரன் எழுத அண்ணன் இசைஞானி இளையராஜா இசையமைத்து பாடிய பாடல் இது. இந்த பாடல் வெளியாகி 30க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் சொந்த மண்ணை விட்டு நாம் துரச்செல்லும்போது நம் மனதை வருடும் பாடலாக இந்த பாடல் இன்றளவும் உள்ளது. வெளிநாடுகளில் வேலை செய்யும் ஓவ்வொரு மனிதனும் தன் தாய் மண்ணை நினைக்காத நாளில்லை.

கால்வயிற்று கஞ்சியாக இருந்தாலும் அதை நம் வீட்டில் நமது மண்ணில் குடிக்கும்போது அதன் ருசி அதிகம். அந்த கருத்தை தற்போது மெய்ப்பித்து காட்டியுள்ளனர் சிங்கப்பூரில் பல லட்சங்கள் சம்பாரித்து வந்த கணேசன் மற்றும் விமலா தேவி தம்பதியினர். கடந்த 2002ம் ஆண்டு முதல் இந்த தம்பதியினர் சிங்கப்பூரில் வேலைசெய்து வந்துள்ளனர். சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமையும் அவர்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாதம் சுமார் 9 லட்சம் அளவிற்கு சம்பாதித்துள்ள இந்த தம்பதி தற்போது தங்களது சொர்கத்தை தேடி மீண்டும் தாயகம் வந்து இயற்கையோடு ஒன்றித்துள்ளார்.

இரண்டு மகள்கள் மற்றும் தங்களது ஒரு மகனோடு இணைந்து 60 ஏக்கர் நிலத்தில் கூட்டு பண்ணை விவசாயம் செய்துவருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிட்லிங் மலைகிராமத்தில் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தம்பதி தங்கள் குடும்பத்தோடு இணைந்து இயற்கை விவசாயம் செய்து வருகின்றது. மாடுகள் மூலம் கிடைக்கும் சாணம் மற்றும் கோமியமே இவர்களின் பிரதான உரங்களாக உள்ளன. தென்னை மரங்கள், கரும்புத்தோட்டம், ஆடு, மாடு, கோழி மற்றும் வாத்து என்று சுற்றிலும் பசுமை நிறை சூழலில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் ஒரு மாதம் ஈட்டும் வருவாயை இங்கு சம்பாரிக்க ஒருவருடம் தேவைப்படுகிறது என்றபோது மனநிறைவு முழுமையாக உள்ளது என்று இந்த தம்பதியினர் கூறுகின்றனர். லட்சக்கணக்கான வருமானத்தை விட்டுவிட்டு தாய் மண் நம்மை எப்போது காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடும் இயற்கையோடும் இணைந்து வாழ்கின்றனர் இந்த தம்பதியினர்.

Related posts