கால்பந்து மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை ஒப்பிடுகையில், கிரிக்கெட்டின் மவுசும் அதன் வர்த்தகமும் உலகளவில் குறைவு என்றாலும், ஆசிய கண்டத்தை பொறுத்தவரை கிரிக்கெட் தான் எப்போதும் டாப்.
அதிலும் குறிப்பாக அண்டை நாடான இந்தியாவை பற்றி சொல்லவே வேண்டாம். கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்கள் பலரின் கனவு நாயகர்களாக வலம் வருகின்றனர். அப்படிப்பட்ட ஹீரோக்களில் இந்த 2021ம் ஆண்டு அதிக வருமானம் ஈட்டும் வீரர்கள் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த பட்டியலில் 10வது இடத்தில் ரசிகர்களால் “சின்னத் தல” என்று செல்லமாக அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா உள்ளார். ரெய்னா கடந்த ஆண்டே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்றபோதும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கும் சுரேஷ் ரெய்னாவின் ஆண்டு வருமானம் 22.34 கோடியாம்.
9வது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ். இவரது ஆண்டு வருமானம் சுமார் 22.40 கோடியாம். பட்டியலில் 8வது இடத்தில் இருப்பவர் தான் மிஸ்டர் 360 டிகிரி டி. வில்லியர்ஸ். இவரது ஆண்டு வருமானம் 22.50 கோடி. 7வது இடத்தில் இருப்பது நம்ம ஜஸ்ப்ரித் பும்ரா. இவரது ஆண்டு வருமானம், 31.65 கோடியாகும்.
பட்டியலில் 6வது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித். இவரது ஆண்டு வருமானம், ரூ.55.86 கோடியாம். அதேபோல், பட்டியலில் 5வது இடத்தை வகிக்கிறார் நம்ம ஹர்திக் பாண்ட்யா. இவரது ஆண்டு வருமானம் 59.59 கோடி என கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வருடத்திற்கு ரூ.60 கோடி வருமானத்துடன் இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். 3வது இடத்தில், இந்திய அணியின் துணை கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் ஷர்மா, வருடத்திற்கு 74.49 கோடி வருமானம் ஈட்டுகிறாராம்.
2வது இடத்தில் இருப்பது யார் தெரியுமா? அவர் தான் நம்ம “தல” தோனி. இவரது வருட சம்பளம், ரூ.108.28 கோடி. அண்மையில் தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடிய தோனி, தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.
சரி இந்த பட்டியலில் யார் அந்த முதலிடம் பிடித்த வீரர் என்று நீங்கள் கணித்திருப்பீர்கள். ஆம் உங்கள் கணிப்பு சரிதான். இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த வீரர் கேப்டன் விராட் கோலியே தான். இவரது ஆண்டு வருமானம், 208.56 கோடியாம்.