TamilSaaga

“எனக்கான காலம் வரும்” : தனியொரு ஆளாக கஷ்டப்பட்டு சாதித்துக்காட்டிய கம்பம் மீனா – ஒரு சாதனை பதிவு

நாச்சி முத்து மீனாவை பற்றி உங்களுக்கு தெரியுமா?, அவர் யார் என்று கேட்கின்றீர்களா, சரி இந்த பெயர் தெரியாவிட்டால் பரவாயில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்தூரி அத்தாட்சியை உங்களுக்கு மிகவும் பிடிக்குமல்லவா, அவருடைய உண்மையான பெயர் தான் நாச்சி முத்து மீனா. பொதுவாக சினிமா துறை மற்றும் சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் கடந்து வந்த பாதையை பார்த்தால், பலருக்கும் அது உத்வேகத்தையும் பல மடங்கு தெம்புடன் கூடிய நம்பிக்கையையும் தரும். அதே போலத்தான் நமது மீனா அக்காவின் வாழ்க்கையும் உங்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் ஒன்றாக உள்ளது.

சின்னத்திரையை பொறுத்தவரை வட்டார வழக்கில் பேசும் நடிகர்களின் எண்ணிக்கை சற்று குறைந்த ஆளவிலேயே காணப்படுகிறது. அந்த வகையில் நமது மீனா அக்கா வட்டார வழக்கில் புகுந்து விளையாடும் கம்பம் பெண். 10வது படிக்கும்போதே கல்யாணம், வாழ்கை என்றால் என்ன என்பதை குறித்து தெரிந்துகொள்வதற்கு முன்பே இரண்டு குழந்தைகள் என்று வாழ்க்கையில் சற்றென்று பல பொறுப்புகள் வந்து சேர்ந்தது மீனா அக்காவிற்கு. இதனிடையே கணவரின் தொழிலை அவருக்கு உதவ LIC ஏஜென்ட்டாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

நடிகை கம்பம் மீனாவின் இன்ஸ்டா பதிவு

கம்பம் பகுதியை சுற்றி அக்காவை தெரியாத ஆட்களே இல்லை என்ற அளவுக்கு சின்னத்திரையில் வருவதற்கு முன்பே மீனா அக்கா மிகப்பிரபலம். கடந்த 2008ம் ஆண்டு பிரபல கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகம் தான் “தெக்கத்தி பொண்ணு”. நெப்போலியன், ரஞ்சிதா மற்றும் சொர்ணமால்யா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்க இந்த நாடகத்திற்கு இசையமைத்தது நமது இசைஞானி தான். மேலும் இந்த நாடகத்தின் இயக்குநர் நமது மண்ணின் மைந்தன் இயக்குனர் இமயம் பாரதிராஜா தான். சரி இப்பொது எதற்கு இந்த தகவல் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நம்ம மீனா அக்கா முதன்முதலில் நடிகையாக களமிறங்கியது இந்த நாடகம் மூலம் தான். அவரது வட்டார பேச்சு இந்த கதாபாத்திரம் கிடைக்க அவருக்கு மிகவும் உதவியது.

70க்கும் மேற்பட்ட படங்களில் அக்கா நடித்திருத்தபோதும் அவர் சின்னத்திரையில் பெற்ற பெயர் வேற லெவல் என்றால் அது மிகையல்ல. மாயாண்டி குடும்பத்தார், சகுனி, கைதி, முண்டாசுப்பட்டி களவாணி மற்றும் ராவணன் என்று பல படங்களில் நடித்துள்ள மீனா தற்போது விஜய் தொலைக்காட்சியில் மட்டும் மூன்று சீரியல்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நல்ல உயர்ந்த நிலையில் இருந்தாலும் ஆரம்ப காலத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் பல. ஆனால் அந்த தடைகளை எல்லாம் கடந்து தற்போது சூப்பர் ஹிட் நடிகையாக வலம்வருகின்றார் நம்ம மீனா அக்கா.

Related posts