சிங்கப்பூர், இன்று உலக அளவில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள இளைஞர்கள் கூட இங்கு வந்து வேலை பார்க்க ஆசைப்படும் ஒரு சிறப்பான நாடு. காரணம் நல்ல சம்பளம் என்பது ஒருபுறம் என்றால் நல்ல சூழ்நிலை என்பது தான் உண்மையான காரணம்.
மலேசியா, இந்தோனேஷியா மற்றும் இந்தியாவை சேர்ந்த பல லட்சம் இளைஞர்கள் இங்கு வேலைதேடி வருடாவருடம் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் அனைவருக்கும் சிங்கப்பூர் வேலை என்ற அந்த கனவு பலித்துவிடுவதில்லை என்றே கூறலாம்.
அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிநாட்டு ஊழியர்களின் வருகை என்பது அதீதமாக குறைந்தது. காரணம் பெருத்தொற்று என்பதில் எந்தவித மாற்றுக்கருதுமில்லை, ஆனால் தற்போது நிலைமை சீராகி வருகின்றது.
MOM அளித்த மகிழ்ச்சிகரமான தகவல்
சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட தகவலில் “2022ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு என்பது பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்த அதிகரிப்புக்கு காரணம் வெளிநாட்டு ஊழியர்களின் வருகையை” என்று கூறியுள்ளது.
அதே நேரத்தில் வேலையின்மை விகிதங்கள் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைகளில் தான் இருந்து வருகின்றது என்றும், மேலும் ஆட்குறைப்பு எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களைத் தவிர்த்து, சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்பு இரண்டாவது காலாண்டில் 64,400 அதுவது 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
சரி சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கின்றது
கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவில் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரில் உள்ள முதலாளிகள் பலர் அதிக அளவிலான பணியாளர்களை வேலைக்கு அமர்த்த விருப்பம் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் ஆட்சேர்ப்பு நிறுவனமான ManpowerGroup, 500க்கும் மேற்பட்ட முதலாளிகளிடம் நடத்திய ஒரு ஆய்வின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான NEO எனப்படும் Net Employment Outlook 25 சதவிகதமாக இருந்த நிலையில் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் அது மேலும் 11 புள்ளிகள் உயரும் என்று கணித்துள்ளது.
ManpowerGroup நடத்திய கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ள 11 துறைகளில், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் சுமார் 38 சதவிகிதம் அதிக அளவிலான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க ஆர்வம் கட்டியுள்ளதாக ஆய்வு கூறுகிறது. அதேபோல உற்பத்தி, வங்கி, நிதி, காப்பீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் 26 சதவிகித வேலைவாய்ப்பு உயர்வும் கட்டுமானத் துறையில் 24 சதவிகித உயர்வும் அதிகரிக்கவுள்ளன. அதே நேரத்தில் ஹோட்டல் துறையை பொறுத்தவரை இந்த புள்ளிவிவரம் சற்று மந்தநிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியான சரியான புள்ளிவிவரங்கள், எல்லைகள் மெல்ல மெல்ல மீண்டும் முழுமையாக மீட்சியடையும் நிலை என்று இவை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது சிங்கப்பூரில் வேலைக்கு சேர இதுவே சரியான நேரம் என்று நிச்சயம் கூறலாம். நல்ல தயாரிப்போடு சரியான முகவர்களை அணுகி சிங்கப்பூர் வந்து இந்நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்று தொழிலாளர்களும் பயனடையலாம்.