சிங்கப்பூரில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) காலை ஜூரோங் வெஸ்டில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 37 பேர் இந்த கோர விபத்தில் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, காவல்துறையும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) காலை 6.30 மணியளவில் First Lake yong சாலை மற்றும் லோக் யாங் வே சந்திப்பில் ஒரு விபத்து நடந்தது குறித்து தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக கூறியுள்ளது.
உடனடியாக ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பேருந்து ஓட்டுநர் SCDF படையினரால் மீட்கப்பட்டு அங்கிருந்த ஒரு துணை மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டார். ஆனால் சம்பவ இடத்திலேயே அந்த ஓட்டுநர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஷின் மின் டெய்லி நியூஸ் அளித்த தகவலின்படி, இறந்தவர் 73 வயதான பகுதி நேர ஓட்டுநர் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்து நடந்த போது அந்த தொழிற்சாலை பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் விபத்துக்குள்ளான மற்றொரு பேருந்தில் இருந்து மொத்தம் 37 பயணிகள் Ng Teng Fong பொது மருத்துவமனை மற்றும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த பேருந்தின் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.