மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொது நிதி திரட்டலை ஆதரிப்பதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் US$60,000 (S$82,000) தொகையை அளிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் (MFA) இன்று புதன்கிழமை (டிசம்பர் 22) வெளியிட்ட ஒரு பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளது. மலேசிய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவைச் சங்கங்களுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தலா 50,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்குவதற்கு இந்தப் பங்களிப்பு துணைபுரியும் என்று அமைச்சகம் கூறியது.
இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் “Upgrade” ஆகும் VTL கவுண்டர்கள்”
“மலேசியாவில் வெள்ளம் மற்றும் பிலிப்பைன்ஸில் ராய் சூறாவளி பல உயிர்களை பலிவாங்கியுள்ளது. மற்றும் பரவலான அளவில் பலருடைய சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளது, பல சமூகங்களுக்கு கஷ்டங்களையும் துன்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது” என்று MFA தெரிவித்துள்ளது. “ஒரு நெருங்கிய நண்பராகவும், சக ஆசியான் உறுப்பு நாடாகவும், சிங்கப்பூர் இந்த கடினமான நேரத்தில் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸுக்கு ஆதரவாக நிற்கிறது” என்றும் அமைச்சகம் தெரிவித்தது.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் உறுதியளித்த பணம், அவசரகால சுகாதாரம் மற்றும் முதலுதவி உதவிகள், தார்பாய்கள், சூடான உணவுகள், உடைகள் மற்றும் போர்வைகள் போன்ற பொருட்களை முகாம்களுக்கு விநியோகம் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் என்று கடந்த திங்களன்று MFA அமைப்பு ஒரு ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று செவ்வாய்கிழமை நிலவரப்படி மலேசியாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தின் விளைவாக 20-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதே நேரத்தில் 65,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அதேபோல பிலிப்பைன்ஸில், நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் ராய் சூறாவளி தாக்கியதில் குறைந்தது 375 பேர் கொல்லப்பட்டனர் என்று அஞ்சப்படுகிறது மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். புயல் உள்கட்டமைப்பை அழித்ததால், பல பகுதிகளில் தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், 400,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.