சிங்கப்பூரில் தமிழர்கள் வாழ்ந்தாலும் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் நம் தமிழக உணவுகள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. நம் ஊர்களில் ஹோட்டல்களில் சாப்பிட்டது போல் சாப்பிட வேண்டும் என்றால் அவர்கள் லிட்டில் இந்தியாவிற்கு தான் வர வேண்டும். அதற்காகவே வார இறுதி நாட்களில் லிட்டில் இந்தியாவிற்கு படை எடுக்கும் கூட்டம் இங்கு அதிகம்.
அவ்வாறு லிட்டில் இந்தியாவில் தமிழர்கள் அதிகமாக வருகை தரும் புகழ்பெற்ற ஹோட்டல் தான் சரவணபவன். கொரோனா தொற்றுக்காலத்தில் ஏற்பட்ட சில நெருக்கடிகளின் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஹோட்டல் மூடப்பட்டது. தற்பொழுது லிட்டில் இந்தியாவில் சென்ட்ரியம் ஸ்குவேர் என்ற கட்டிடத்தில் முதல் தளத்தில் மீண்டும் கோலாகலமாக திறக்கப்படுகின்றது.
இதற்கு முன்பாக இந்த உணவகத்திற்கு சிங்கப்பூரில் ஆறு கிளைகள் இருந்தாலும் முதல் கட்டமாக ஜனவரி 26 ஆம் தேதி ஒரு உணவகம் மட்டும் திறக்கப்படுகின்றது. கொல்கத்தாவை சேர்ந்த சிங்கப்பூர் பி ஆர் ஆன திரு அசோக் சௌத்ரி அவர்கள் இந்த உணவகத்தை நடத்த உரிமம் பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறும் பொழுது லிட்டில் இந்தியாவில் ஏராளமான சைவ உணவகங்கள் உள்ளதால் அவற்றுடன் போட்டி போடும் விதமாக புதுவிதமான உணவு வகைகள் இங்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன என கூறினார்.
மேலும் இங்கு உணவு சாப்பிடுபவர்களுக்கு வீட்டு சாப்பாடு சாப்பிட்டது போன்ற உணர்வு வர வேண்டும் என்பதற்காக அஜினமோட்டோ, செயற்கை நிறமூட்டிகள் போன்றவற்றை தவிர்த்து உணவு தயார் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார். ஏற்கனவே சிங்கப்பூரில் தலப்பாகட்டி என்னும் பாரம்பரிய உணவகத்தை நடத்தி வரும் அசோக் இந்த உணவகத்திற்காக தமிழ்நாட்டில் இருந்து ஐந்து சமையல் கலைஞர்கள் மற்றும் பிற வேலைகளுக்காக 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் வசிக்கும் மக்கள், சுற்றுலாப் பயணிகள் போன்ற அனைவரும் உணவருந்தும் வகையில் காலை 7:00 மணி முதல் இரவு 11 மணி வரை மூன்று நேரமும் உணவு வழங்கப்படும் என கூறினார். நவீன வசதிகளுடன் திறக்கப்படும் இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து உணவு உண்ணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சீன வரை உணவுகள், விதவிதமான ஐஸ்கிரீம்கள், ஸ்மூத்திகள் உள்ளிட்ட 550 க்கும் மேற்பட்ட உணவு வகைகள் மெனு கார்டில் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
எனவே நீங்கள் சரவணபவன் உணவை மூன்று வருடங்களாக மிஸ் செய்திருந்தால் திரும்பவும் சுவைத்து மகிழலாம்!