நேற்றைய தினம் சிங்கப்பூர் சுங்கச்சாவடி மற்றும் குடிநுழைவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் சிங்கப்பூரில் இருந்து மலேஷியா நோக்கி செல்லக்கூடிய உட்லண்ட்ஸ் கடற்பாலத்தில், வழக்கத்தை விட கூட்டநெரிசல் அதிகம் இருக்கலாம் என்றும். ஆகவே மக்கள் சற்று நிதானத்துடன் செயல்பட அறிவுறுத்துவதாகவும் தெரிவித்தது.
பொதுவாக வார இறுதி நாட்களில், இரு நாட்டின் எல்லையை கடக்க அதிக அளவிலான மக்கள் இந்த பாலத்தை கடப்பதுண்டு. அந்த வகையில் நேற்று சனிக்கிழமையும் அதிக அளவிலான மக்கள் உட்லண்ட்ஸ் பாலத்தை கடக்க முயன்றுள்ளனர்.
உட்லேண்ட்ஸ் அவென்யூ 3
இந்த சூழலில், கடற்பாலம் அருகே உள்ள உட்லண்ட்ஸ் அவென்யூ 3 எக்ஸிட் பகுதிக்கு அடுத்துள்ள இடத்தில் ஒரு விபத்து நடந்துள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு அவசர அழைப்பு வந்துள்ளது. மாலை சுமார் 6 மணியளவில் இந்த விபத்து நடந்த நிலையில் சிங்கப்பூர் SCDF அங்கு விரைந்துள்ளது. சம்பவ இடத்தில் இரு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது தெரியவந்தது.
பறிபோன உயிர்
இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த 37 வயது மதிக்கதக்க அந்த நபர் சுயநினைவின்றி இருந்த நிலையில், அவர் உடனடியாக கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் இந்த விபத்தில் அந்த இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணித்த பெண்மணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
நிலச் சோதனைச் சாவடிகள் குழு உறுப்பினர் ஒருவர் ஃபேஸ்புக்கில் இது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இந்த விபத்து சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் விரைவுச் சாலையின் மூன்று பாதைகளையும் பாதித்ததாக கூறியுள்ளார். பாலத்தின் வலதுபுறப் பாதையில் இரு கார்கள் மோதிய நிலையில் நிற்க, அருகில் ஒரு மோட்டார் சைக்கிள் பக்கவாட்டில் நொறுங்கி கிடப்பதையும் அந்த காணொளியில் காணமுடிந்தது.
சிங்கப்பூரின் “S பாஸ்” – 2025ம் ஆண்டில் வரவிருக்கும் மாற்றங்கள் என்னென்ன? – Detailed ரிப்போர்ட்!
விபத்து குறித்து விசாரணை
இறந்த அந்த பெண்மணி 45 வயது மதிக்கத்தக்கவர் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து சிங்கப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று உட்லண்ட்ஸ் கடற்பாலத்தில் அதிக கூட்ட நெரிசல் இருந்த நிலையில் இப்படி ஒரு இறப்பு சம்பவம் நடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.