TamilSaaga

சிங்கப்பூரில் காதலியை கொன்ற வழக்கு.. மரண தண்டனையை எதிர்கொள்ளும் வெளிநாட்டு தொழிலாளி – என்ன நடந்தது?

சிங்கப்பூர் கெய்லாங் ஹோட்டலில் தனது காதலியை கொன்றதற்காக டிசம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு வெளிநாட்டு தொழிலாளி தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி நேற்று செவ்வாய்க்கிழமை (அக் 12) மேல்முறையீட்டு வழக்குடன் நீதிமன்றத்தை நாடினார்.

பங்களாதேஷைச் சேர்ந்த அகமது சலீம் என்பவர் கோல்டன் டிராகன் ஹோட்டலில் டிசம்பர் 30, 2018 அன்று இந்தோனேசிய பணிப்பெண்ணான நூர்ஹிதயாதி வர்டோனோ சுரதாவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அப்பெண் சலீமுடைய பெண் தோழி என்று கூறப்படுகிறது.

ஆனால், அகமதுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட, அதனை சுரதா தட்டிக் கேட்ட பொழுது, டவலால் கழுத்தை நெரித்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு பிறகு, அந்த பெண்ணின் உடல் கெய்லாங் ஹோட்டல் வரவேற்பாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அகமது “முன்கூட்டியே திட்டமிட்டு, ஒருங்கிணைந்து கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவருவதாக” உயர் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார்.

அதேசமயம், சுரதாவ வேறொரு ஆணுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும், அதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக எதிர்தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் அகமது மன வேதனை, பதட்டம், பொறாமை மற்றும் மனச்சோர்வு ஆளானதாக வழக்கறிஞர்கள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இரவன்று, அப்பெண் தனது புதிய உறவு குறித்து அகமதுவுடன் தகராறு செய்து அவமானப்படுத்தும் வகையில் வார்த்தைகளை விட்டதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அதாவது, அப்பெண் அகமதுவிடம் “அவர் உங்களை விட சிறந்தவர், அவர் உங்களை விட படுக்கையில் சிறந்தவர், அவர் வசதியிலும் சிறந்தவர். நீங்கள் நம்பவில்லை என்றால், அடுத்த வாரம் நான் அவருடன் சென்று மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ எடுத்து உங்களுக்குக் காண்பிப்போம்” என்று கூறியதாக அகமது வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

இருப்பினும், விசாரணை நீதிபதி, அவள் அப்படிச் சொல்லவில்லை என்பதைக் கண்டறிந்தார். மேலும் அஹமது காவல்துறையினருடனோ அல்லது மனநல சுகாதார நிறுவனத்தின் (ஐஎம்ஹெச்) மனநல மருத்துவருடனோ பல நேர்காணல்களில் இதுபோன்ற வார்த்தைகளைக் சொல்லவே இல்லை என்பதை நீதிபதி அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.

இந்நிலையில், முன்பே இந்த வழக்கில் நீதிபதிகள் அகமதுவுக்கு தூக்கு தண்டனை விதித்த நிலையில், அதனை எதிர்த்து, இத்தனை வாதங்களையும் அகமது வழக்கறிஞர்கள் முன்வைத்தனர். ஆனால், நீதிபதிகளோ, தங்கள் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. எனினும், நீதிபதிகள் தாங்கள் முன்பு விதித்த தூக்கு தண்டனையை நிலுவையில் வைத்திருக்கின்றனர். விரைவில், இறுதி தீர்ப்பை வெளியிட இருப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Related posts