TamilSaaga

சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் சென்ற இளம்பெண் மர்ம மரணம்… அடுத்த சிலமணி நேரத்தில் சிங்கப்பூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! – ‘எல்லாம் முடிந்தது’ என ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை!

SINGAPORE: தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், கடந்த 10 வருடங்களாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்திருக்கிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் சிங்கையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆக.23 மாலை.. அதாவது செவ்வாய்க்கிழமையன்று மாலை, அந்த செவிலியரை அவரது உறவினர்கள் அனைவரும் அரக்க பறக்க மோட்டார் சைக்கிளில் தூக்கிக் கொண்டு அறந்தாங்கியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருக்கின்றனர். சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டுக்கே கொண்டு வந்து, அவசர அவசரமாக மயானம் கொண்டுச் சென்று உடலை தகனம் செய்துவிட்டனர்.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில், சிங்கப்பூரில் வேலை செய்து வந்த அறந்தாங்கி புள்ளைவயல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன், தனது சமூக வலைத்தள பக்கத்தில்,

‘நாங்க ஒன்னு சேரப் போறோம். இனிமேல் எங்களை யாராலும் பிரிக்க முடியாது;
லவ் யூ ஆல், அவ்ளோ தான் எல்லாம் முடிந்தது.. பை’

என்று சில ஸ்டேட்டஸ்களை வைத்திருக்கிறார். இதைப்பார்த்து பதறிய அவரது நண்பர்கள், கார்த்திக்கை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பது கூட தெரியவில்லை. அடுத்த சில மணி நேரத்தில் சிங்கப்பூரில் உள்ள தனது தாய் மாமாவுக்கு தான் இருக்கும் லொகேஷனை அனுப்பிவிட்டு, தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, நண்பர்களுடன் சென்று பார்த்த கார்த்திக்கின் தாய்மாமா, உடனடியாக சிங்கப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த சிங்கை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்போது அவரது உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, நாளை (ஆக.26) வெள்ளியன்று திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிங்கப்பூர் போலீசார் மற்றும் கார்த்திக்கின் தாய்மாமா கொடுத்த தகவலின் அடிப்படையில், அறந்தாங்கி வட்டாட்சியர் உத்தரவின் பேரில் ஆமஞ்சி வட்ட கிராம நிர்வாக அலுவலர் மோகன், செவிலியர் இறந்ததாக கூறப்படும் கிராமத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இதில், அப்பெண் மர்மமான முறையில் இறந்ததும், உடலை காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு தகவல் சொல்லாமல் தகனம் செய்துவிட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, உடலை யாருக்கும் தெரியாமல் தகனம் செய்த அந்த இளம்பெண்ணின் தாய், அண்ணன், அக்கா மற்றும் உறவினர்கள் மீது ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மோகன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் இறந்த ஊழியர் கார்த்திக் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால், தமிழ் சாகா சிங்கப்பூர் தளத்தின் வாட்ஸ் எண்ணான +91 8269 418 418-க்கு தகவல் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Related posts