சிங்கப்பூர் வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், ஏப்ரல் 26 முதல் Covid 19 சோதனை எடுக்காமல் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் ஒரு தடுப்பூசி மட்டுமே போட்ட பயணிகள் கட்டாயம் PCR சோதனை எடுத்த பிறகே சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போதுள்ள விதிகளின்படி சிங்கப்பூர் வருவதற்கு 48 மணி நேரத்திற்குள் பயணிகள் பெருந்தொற்று சோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே “இந்த நடவடிக்கையின் மூலம், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைய எந்த சோதனையும் தேவையில்லை” என்று சுகாதார அமைச்சகம் (MOH) இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேபோல வரும் மே 1ம் தேதி முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மலேசியர் அல்லாத வேலை அனுமதி வைத்திருப்பவர்களும் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று MOH தெரிவித்துள்ளது.
முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகளுக்கான நுழைவுத் தேவைகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று MOH மேலும் கூறியது.
13 வயது மற்றும் அதற்கு மேல் தடுப்பூசி போடாத பயணிகள், சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதே போல ஏழு நாள் வீட்டில் தங்குவதற்கான அறிவிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். இறுதியில் PCR COVID-19 சோதனையை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.