சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்கம், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தன்னார்வ பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஜனாதிபதி சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்படும்.
அதன்படி, இந்தாண்டு அதற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில், தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் குறிப்பாக, சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் நஷ்ஹத் பஹீமா என்ற பெண்ணுக்கு சிறந்த மனித நேய பணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகை இஸ்தானாவில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், நஷ்ஹத் பஹீமாவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாகூப் விருது வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சி தேசிய தன்னார்வு மற்றும் தொண்டு மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து விருது பெற்ற பஹீமா கூறுகையில், ‘விருது பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இன, மத வேறுபாட்டை களைந்து அனைத்து மக்களிடம் நல்லிணக்கம் தொடர்ந்து நிலைத்திட பணியாற்றுவேன்’ என பெருமை பொங்க தெரிவித்தார்.