TamilSaaga

“நாகேந்திரனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையில் மாற்றமில்லை” : மலேசிய அரசுக்கு பதில் கடிதம் அனுப்பிய ஹலீமா யாக்கோப்

நாகேந்திரன் – 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு 42.72 கிராம் அளவுள்ள சுத்தமான ஹெராயின் என்னும் போதைப்பொருளை தொடையில் கட்டிக்கொண்டு கடத்த முயன்றதாக சிங்கப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, 2010ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. தனது மரண தண்டனைக்கு எதிராக நாகேந்திரன் 2011 உயர்நீதிமன்றத்திலும், 2019 உச்சநீதிமன்றத்திலும் தொடர்ந்த மேல்முறையீடுகளில் தோல்வியடைந்தார்.

இதையும் படியுங்கள் : “கட்டுமான, கப்பல் துறை ஊழியர்கள்” : இனி VTL மூலம் சிங்கப்பூர் வரப் பதிவு செய்ய அனுமதி இல்லை

தலைமை நீதிபதி உட்பட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட சிறப்பு நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டு விண்ணப்பங்களை நிராகரித்தது. ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாகேந்திரனுக்காக வழக்காடி வந்த வழக்கறிஞர் எம் . ரவி இந்த நவம்பர் மாதம் நாகேந்திரனின் மனநிலை குறித்த மனு ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அதில் நாகேந்திரனுக்கு 18 வயதுக்கும் குறைவான மனநிலையை இருப்பதாகவும், எனவே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதில் இருந்து விலக்கு அளிக்க நீதித்துறை கருணையை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாகேந்திரன்  மனநிலை பரிசோதனை குறித்த அறிக்கைகள் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அவர் குற்றச் செயலில் ஈடுபடும் பொழுது தெளிவான மனநிலையே கொண்டிருந்தார், எந்த விதமான மனநிலை பாதிப்புக்களும் இல்லை என்று விசாரணை நீதிபதிகள் கண்டறிந்து அவருடைய மனுவையும் தள்ளுபடி செய்தனர். 

நாகேந்திரனுக்கு நவம்பர் 9 ஆம் தேதி அன்று மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு இருந்தது . ஆனால் நாகேந்திரனுக்கு கோவிட் – 19 தோற்று உறுதி செய்யப்பட்டதால் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மலேசிய போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நாகேந்திரனுக்காக, மலேசிய அரசாங்கமும், மலேசிய வெளியுறவு துறை அதிகாரிகளும், சிங்கப்பூர் அரசுக்கு தொடர்ந்து பல கோரிக்கைகளையும், கடிதங்களையும் அனுப்பி வந்தனர்.

ஆனால் இவைகளுக்கு உச்சகட்டமாக மலேசிய மன்னரும் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாகேந்திரனின் மரண தண்டனை கோவிட் தோற்றினை முன்னிட்டு தள்ளிவைக்கப்பட்டதை தொடர்ந்து, நவம்பர் 23 மலேசியாவின் துணை வெளியுறவு மந்திரி,மலேசிய  மன்னர் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதாக தெரிவித்தார்.  

மலேசிய தலைவர்களின் இந்த மேல்முறையீட்டு கடிதங்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், நாகேந்திரன் சட்டத்தின்கீழ் முழுமையான விசாரணை அடிப்படையிலேயே குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனைக்கு உரியவராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று பதிலளித்துள்ளார்.

முன்னதாக நவம்பர் 12 அன்று பிரதமர் லீ மற்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரும் நாகேந்திரன் வழக்கு தொடர்பாக மலேசிய அதிகாரிகளுக்கு பதில் அளித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவைகளின் அடிப்படையில் நாகேந்திரன் மரண தண்டனைக்கான தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்காக மலேசிய மன்னர் வரை சிங்கப்பூர் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்ததும், சட்டத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் அரசாங்கம் அதை நிராகரித்ததும் பரவலாக சிறப்பான கவனத்தைப் பெற்றிருக்கிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts