சிங்கப்பூரில் டாம்பைன்ஸ் நார்த் பகுதியில் உள்ள BTO திட்டத்தின் தளத்தில் Fork Lift ஓட்டுநர் ஒருவர் கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 23) இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கமாக கவிழ்ந்த வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார் அவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 49 வயதான அந்த சீன நாட்டவர், சம்பவம் நடந்தபோது, ஃபோர்க்லிஃப்ட்டைத் திருப்பிக் கொண்டிருந்தார் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளித்த மனிதவள அமைச்சகம் (MOM) கூறியது.
டாம்பைன்ஸ் ஸ்ட்ரீட் 64ல் வரவிருக்கும் Tampines GreenCrest BTO திட்டத்தின் தளத்தில் நடந்த இந்த அபாயகரமான தொழில்துறை விபத்து குறித்து கடந்த புதன்கிழமை மாலை 5 மணியளவில் தங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக காவல்துறை கூறியது. சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அந்த தொழிலாளி மயக்கமடைந்த நிலையில் இருந்தார் என்றும், பின்னர் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். அவர் சீனா கன்ஸ்ட்ரக்ஷன் (South Pacific) டெவலப்மென்ட் மூலம் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
MOM மற்றும் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் அந்த இடத்தில் அனைத்து ஃபோர்க்லிஃப்ட் செயல்பாடுகளையும் நிறுத்துமாறு அமைச்சகம் அந்நிறுவனத்திடம் கூறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2020ல் தொடங்கப்பட்டது இந்த 346-யூனிட் Tampines GreenCrest மேம்பாடு. இந்த திட்டம் அடுத்த ஆண்டு நான்காவது காலாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. STக்கு அளிக்கப்பட்ட ஒரு அறிக்கையில், வீட்டுவசதி வாரியம் கட்டிட ஒப்பந்ததாரருடன் இணைந்து அதிகாரிகளின் விசாரணைகளுக்கு உதவுவதாகக் கூறியது.
மேலும் “இறந்தவரின் குடும்பத்திற்கு நாங்கள் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் மற்றும் ஒப்பந்தக்காரருடன் சேர்ந்து, நாங்கள் அவர்களுக்கு ஆதரவையும் உதவியையும் வழங்குவோம்” என்று HDB மேலும் கூறியது. ஒரு பொதுவான பாதுகாப்பு விதியாக, ஃபோர்க்லிஃப்ட் இயக்கத்தில் இருக்கும் போது, ஃபோர்க்லிஃப்ட் ஆபரேட்டர்கள் பெல்ட் போட்டிருக்க வேண்டும் என்று MOM தெரிவித்தது. கடந்த புதன்கிழமை நடந்த இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளி சீட் பெல்ட் அணிந்திருந்தாரா? என்பது குறித்து அமைச்சகம் எந்த தகவலும் அளிக்கவில்லை.
புதன்கிழமை நடந்த விபத்து, இந்த ஆண்டு பணியிடத்தில் நிகழ்ந்த மூன்றாவது மரணமாகும். 2020ல் 30 இறப்புகள் மற்றும் 2019ல் 39 இறப்புகளுடன் ஒப்பிடுகையில், கடந்த 2021ல் குறைந்தது 37 பணியிட இறப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அமைச்சகம் கூறுகின்றது. பணியிட பாதுகாப்பு மற்றும் உடல்நலம் (WSH) கவுன்சிலின் ஃபோர்க்லிஃப்ட்களின் பாதுகாப்பான செயல்பாட்டிற்கான வழிகாட்டுதல்களின்படி, ஃபோர்க்லிஃப்ட் ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்கும்போது பாதுகாப்பு ஹெல்மெட், பாதுகாப்பு காலணிகள் மற்றும் ஒளியை பிரதிபலிக்கும் மேலாடை போன்ற பொருத்தமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் அணிய வேண்டும் என்று கூறியுள்ளது.