நேற்று ஏப்ரல் 1ம் தேதி முதல், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், பெருந்தொற்று சோதனைகள் இல்லாமல், அனைத்து போக்குவரத்து முறைகள் வழியாகவும் இரு நாடுகளுக்கும் இடையே நில எல்லை வழியாக பயணிக்க துவங்கிவிட்டனர்.
பெருந்தொற்று காரணமாக அவசரகால எல்லை மூடல் நடவடிக்கை அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில், சிங்கப்பூரில் உள்ள பல மலேசியர்கள் இறுதியாக தங்கள் குடும்பங்களை காண எளிதாக வீடு திரும்ப முடிகிறது. இந்நிலையில் நேற்று ஏப்ரல் 1 அன்று சிங்கப்பூரில் இருந்து எல்லையை வெற்றிகரமாக தாண்டிய மலேசியர்கள் பலர் தங்கள் தாய்நாட்டிற்குள் நுழைந்தபோது ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தனர்.
அதிலும் குறிப்பாக சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்குள் நுழைந்த ஒரு நபர் ஜோகூரில் உள்ள ஒரு சாலையில் முழங்காலிட்டு சாலையில் ஓரத்தில் விழுந்து வழங்கி நாட்டிற்குள் சென்றது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. TikTokல் அந்த நபரின் மனைவி பதிவேற்றிய காணொளியில் அந்த நபர் தனது ஆத்மார்த்தமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது நம்மையும் நெகிழச்செய்துள்ளது.
TikTokல் வெளியான அந்த ஒரு நிமிட காணொளியில், அந்த நபர் தனது மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டைக் கழற்றி சாலையில் வைப்பதைக் காணமுடிந்தது. பின்னர் அவர் தனது நெற்றி தரையில் படும்படி குனிந்து சாலையில் விழுந்து வணங்குகிறார். மோட்டார் சைக்கிள் ஒன்று தன்னை கடந்து செல்வதைக்கூட பொருட்படுத்தாமல் சாலையோரம் கண்ணீர் மல்க தனது நாட்டின் மீதான அன்பை அவர் வெளிப்படுத்தினார்.
இறுதியாக எழுந்து நின்ற அவர், “அல்லாஹ் மிகப் பெரியவர், அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், அல்லாஹ்வுக்கு நன்றி” என்று கண்ணீருடன் கூறினார். மலாய் மொழியில் இந்த காணொளியை பதிவிட்ட அந்த நபரின் மனைவி கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 18க்கு பிறகு அவரது கணவர் மலேசியா செல்லமுடியாத நிலை ஏற்பட்டதாக கூறினார்.
இணையத்தில் இந்த நிகழ்வை கண்ட பலர் அவரை பேரன்போடு மலேசியாவிற்குள் Commentகள் வாயிலாக வரவேற்றுள்ளனர். உங்களுடைய அந்த கண்ணீர் கலந்த ஆனந்தத்தை எங்களால் புரிந்துகொள்ளமுடிகிறது என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.