TamilSaaga

காவலர் முகத்தில் சிகரெட் புகை ஊதி ஆபாச அர்ச்சனை செய்த சிங்கப்பூர் நபர் – 9 வாரம் ஜெயில்

சிங்கப்பூரை சேர்ந்த 41 வயதான ரான் புவா குவான் ஹாவ் (Ron Phua Kuan Haw) என்ற நபர் இரண்டு சந்தர்பங்களில் காவலர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதில் ஓர் காவல்துறை பெண் அதிகாரியிடம் மலாய்காரர்களுக்கு எதிராகவும் பேசி அவமதித்துள்ளார்.

சிங்கப்பூர் பொதுப்பணி ஊழியர்களை துன்புறுத்துதல் மற்றும் அவமதித்தல் ஆகிய குற்றங்களுக்காக நேற்று (ஜீலை.15) ஒன்பது வாரம் சிறை தண்டனையை பெற்றுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு (நவம்பர்.30) அதிகாலை 12.40 மணியளவில் மேக்பர்சன் மாலில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் குடி போதையில் ஓர் இயந்திரத்தை சேதப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த காவலர்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது அவர் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்படுகிறார்.

பிறகு அதே ஆண்டு டிசம்பர்.21 ஆம் தேதி அன்று அதிகாலை 1.20 மணிக்கு இரண்டு காவலர்கள் ஆங் மோ கியோ அவென்யூ 1ல் கார் பார்க்கிங்கில் ரோந்து பணியில் இருந்தனர். காருக்குள் தூங்கிய புவாவை எழுப்பி அவரது அடையாளங்களை சோதனை செய்துள்ளனர். அப்போது காரில் இருந்து இறங்கி தள்ளாடிய நிலையில் நின்றிருந்தார்.

பெண் காவலர் ஒருவர் மது குடித்துள்ளீர்களா என கேட்ட போது பதிலளிக்காமல் சென்றுள்ளார். அவரை தடுத்த காவல் துறையினரை தனது ஆள் காட்டி விரலால் தோள்பட்டையில் குத்தியதோடு மட்டுமல்லாமல் சிகரெட் புகையை காவலர் முகத்தில் ஊதியுள்ளார்.

இதுபோன்ற செயல்களால் கைது செய்யப்பட்டு தற்போது குற்றங்களுக்கான தண்டனையை பெற்றுள்ளார்.

Related posts