TamilSaaga

“சிங்கப்பூர் மெய் லிங் தெரு” : தொடர்ச்சியாக உள்ளாடைகளை திருடிய நபர் கைது – 3 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் உள்ளாடை திருட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 57 வயதான ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அன்று, மெய் லிங் தெருவில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்கு வெளியே உள்ளாடைகள் திருடப்பட்டதாக ஒரு புகார் கிடைக்கப்பெற்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்பகுதி மக்களிடம் நடத்திய விசாரணை மற்றும் போலீஸ் கேமராக்களின் உதவியால் கிடைத்த படங்களின் உதவியுடன், க்ளெமெண்டி போலீஸ் பிரிவின் அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் அருகிலுள்ள மற்ற சில வழக்குகளிலும் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது. அந்த நபர் மீது இன்று (ஆகஸ்ட் 25) குற்றவியல் சட்டம் பிரிவு 379ன் கீழ் திருட்டு வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related posts