சிங்கப்பூரில் ஒரு பெண்ணின் மீது கொதிக்கும் நீரை ஊற்றியதற்காகவும், அந்த பெண்ணை மனிதாபிமான இல்லாத வகையில் உதைத்து அறைந்ததாகவும் கூறப்படும் 51 வயது நபர் மீது நீதிமன்றத்தில் நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 28) அன்று குற்றம் சாட்டப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி மதியம் 1.15 மணியளவில், ஒரு நபர் தன்னுடன் உறவில் இருந்த பெண்ணைத் தாக்கியதாகக் கூறப்படும் வழக்கு குறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் பேஃப்ரன்ட் அவென்யூவில் ஏற்பட்ட தகராறின் போது அந்த நபர் அவரை உதைத்து அறைந்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக போலீசார் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர். “தாக்குதல் நடந்தபோது அந்த நபர் பெண் மீது கொதிக்கும் நீரை ஊற்றியதாகவும், அந்தப் பெண்ணைப் பற்றி அவதூறான கருத்துக்களுடன் அவரது மகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது,” என சிங்கப்பூர் போலீஸ் படை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அன்றைய தினமே அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஆபத்தான வழிகளில் தானாக முன்வந்து காயப்படுத்தியது, மற்றும் வேண்டுமென்றே துன்புறுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் வரும் வியாழக்கிழமை அன்று அந்த நபர் மீது சுமத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆபத்தான வழிகளில் தானாக முன்வந்து காயப்படுத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது அத்தகைய தண்டனைகளின் கலவை விதிக்கப்படலாம்.
தானாக முன்வந்து புண்படுத்தும் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 5,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். வேண்டுமென்றே தொந்தரவு செய்யும் குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, 5,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.