சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் கே தர்மலிங்கத்துக்கு கடந்த நவம்பர் 10ம் தேதி நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் நாகேந்திரனுக்கு நவம்பர் 10ம் தேதியன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் அவருக்கு கருணை காட்டுமாறு சிங்கப்பூர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடிதம் அனுப்பினார். அதில், நாகேந்திரனுக்குக் கருணை காட்டுமாறும், சிங்கப்பூர் அதிபரிடம் மீண்டும் ஒரு கருணை மனு அளிக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்து சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நாகேந்திரனின் வழக்கறிஞர் எம்.ரவி தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“நாகேந்திரனுக்கு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிலுவையில் இருப்பதையடுத்து அவருக்கான தண்டனை நிறைவேற்றம் நிறுத்தி் வைக்கப்பட்டுள்ளது,” என வழக்கறிஞர் ரவி தெரிவித்துள்ளார். அடுத்த இரு தினங்களில் தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தற்காலிக நிம்மதியை அளித்து இருப்பதாக நாகேந்திரனின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, “உங்கள் மகன் நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை நவம்பர் 10, 2021 அன்று நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இருந்து வந்துள்ள இந்தக் கடிதம் மலேசியாவில் உள்ள குடும்பத்தை துயரத்தில் ஆழ்த்தியது. சிங்கப்பூர் அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருந்த நாகேந்திரன் 33 வயது இளைஞர் ஆவார்.
2009ஆம் ஆண்டு 42.72 கிராம் ‘Diamorphine’ ‘டயாமார்ஃபைன்’ என்ற தடை செய்யப்பட்ட பொருளுடன் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 21.
‘டயாமார்ஃபைன்’ புற்றுநோயால் ஏற்படும் அதிதீவிர வலிக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளையில் போதைக்காக இதை பயன்படுத்துவதற்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடைப்பகுதியில் கயிறு மூலம் கட்டப்பட்டிருந்த உறையில் ‘டயாமார் ஃபைன்’ கடத்தி வந்த குற்றச்சாட்டுக்காக சிங்கப்பூர் காவல்துறையினர் நாகேந்திரனைக் கைது செய்தனர்.
ஆனால் அந்த உறையில் என்ன இருக்கிறது என்பது தமக்குத் தெரியாது என்றார் அவர். பின்னர் கைதான நாகேந்திரன் போதைப்பொருள் கடத்தல் வழக்கை எதிர்கொண்டார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் நீடித்த வழக்கு விசாரணையின் முடிவில், 2019ம் ஆண்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவருக்கு லேசான அறிவுசார் மாற்றுத்திறன் இருப்பதும், அவரது IQ அளவானது 69 புள்ளிகள் மட்டுமே உள்ளது என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், அவருக்கு நுண்ணறிவு குறைப்பாடு உள்ளதாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இத்தகைய குறைபாடு உள்ளவர்களை தூக்கிலிடக்கூடாது என்றும் வலிறுத்தப்பட்டது. எனினும், சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. அதன் பின்னர், மேல் முறையீடு உள்ளிட்ட சட்டபூர்வமான நடைமுறைகளுக்குப் பின்னர், சிங்கப்பூர் அதிபரிடம் நாகேந்திரன் சார்பில் கருணை மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நாகேந்திரனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாள் தொடர்பான தகவல் சிங்கப்பூர் சிறைத்துறை விதிகளின்படி அவரது குடும்பத்தாருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
அவரைக் காண குடும்பத்தார் வரக்கூடும் என்பதால் சிங்கப்பூரில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் குறித்தும், பெருந்தொற்று வேளையில் அந்நாட்டுக்குள் நுழைவதற்கு உள்ள பயண கட்டுப்பாடுகள் குறித்தும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மரணத்தில் விளிம்பில் இருக்கும் நாகேந்திரனைக் காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் தொடங்கின. கடந்த 10 ஆண்டுகளாக தூக்குத்தண்டனையை நிறுத்தப் போராடி வருகிறார். சட்டங்கள் குற்றங்களைக் குறைக்க வேண்டும். மாறாக, உயிர்களைப் பறிக்கக் கூடாது என்பதே நாகேந்திரன் குடும்பத்தாரின் வாதம்.
இந்த நிலையில்தான் கடைசி நேர அதிசயமாக நாகேந்திரனின் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படும் உத்தரவை சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்து.