TamilSaaga

“குடும்ப உறுப்பினரின் Trace Together டோக்கனைப் பயன்படுத்திய பெண்?” : கைது செய்த சிங்கப்பூர் போலீஸ்

குடும்ப உறுப்பினர் ஒருவரின் “Trace Together” டோக்கனைப் பயன்படுத்தி பொது இடங்களுக்குச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதான அவர், ஒரு பெருந்தொற்று பாதிப்பு உள்ளவரிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்று இன்று வியாழக்கிழமை (நவம்பர் 11) போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (PCR) சோதனை முடிவுகள் நிலுவையில் இருக்கும் வரை வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவரது நிறுவனத்தால் அவர் அறிவுறுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் 30 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் வெவ்வேறு வளாகங்களுக்குள் நுழைவதற்கு மூன்று தனித்தனி சந்தர்ப்பங்களில் தனது குடும்ப உறுப்பினரின் “Trace Together” டோக்கனைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அந்த பெண் குறித்து செப்டம்பர் 3 அன்று காவல்துறைக்கு ஒரு புகார் கிடைத்தது.

வேறொருவரைப் போல நடித்து ஏமாற்றிய குற்றத்திற்காக அவர் மீது இன்று வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. “போலீசார் இத்தகைய பொறுப்பற்ற நடத்தைகளை, குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் தீவிரமாகப் கண்காணித்து வருகின்றது” என்று சிங்கப்பூர் காவல் படை கூறியது.

“ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புணர்வுடன் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும் மற்றும் பொதுமக்கள் நடைமுறையில் உள்ள பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று காவல்துறை மேலும் தெரிவித்தது. ட்ரேஸ் டுகெதர் என்பது பெருந்தொற்று தொடர்புத் தடமறிதலை எளிதாக்குவதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட நாடு தழுவிய டிஜிட்டல் அமைப்பாகும்.

Related posts