Keppel Shipyard-ல் இருந்து ஒரு தகவல்… என்றாலே சிங்கை அதிகாரிகள் கலக்கமடைந்து விடுவார்கள். ஏனெனில், வெளிநாட்டு ஊழியர்களின் உயிர்களை தொடர்ந்து காவு வாங்குவதில் இந்த Keppel Shipyard எப்போதும் முன்னிலையில் இருக்கிறது.
சிங்கப்பூரின் துவாஸ் பகுதியில் Singapore conglomerate Keppel Corporation நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், “கெப்பல் கார்ப்” என்றும் அழைக்கப்படுகிறது. இது கடல் மற்றும் கடல்சார், சொத்து, உள்கட்டமைப்பு மற்றும் சொத்து மேலாண்மை வணிகங்களில் நிபுணத்துவம் பெற்ற பல வணிகங்களை செயல்படுத்தி வருகிறது. 1968 இல் கப்பல் கட்டும் தளமாக தஞ்சோங் பாகரில் அமைந்துள்ள கெப்பல் துறைமுகத்தில் இது நிறுவப்பட்டது. பிறகு அதன் பணிகள் மற்றும் செயல்பாடுகள் ஜூரோங் பகுதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிறுவனத்தில் மொத்தம் 30,000 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதில், 75 சதவிகிதம் பேர் வெளிநாட்டு ஊழியர்கள் தான். இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், இலங்கை என்று பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இந்த கெப்பல் துணை நிறுவனங்களில் கெப்பல் ஆஃப்ஷோர் & மரைன் தான் உலகின் மிகப்பெரிய ஆயில் ரிக் பில்டராக வலம் வருகின்றன. மேலும், மற்றொரு துணை நிறுவனமான கெப்பல் லேண்ட் உலகின் 2வது மிகவும் நிலையான பல்வகைப்பட்ட ரியல் எஸ்டேட் டெவலப்பர் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. கெப்பல் என்ற இந்த நிறுவனத்தின் பெயர் பிரிட்டிஷ் கப்பல் கேப்டன் “ஹென்றி கெப்பல்” நினைவாக வைக்கப்பட்டது.
இப்படி தன்னுள் பல வரலாறுகளை வைத்துள்ள இந்த Keppel நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் பல வெளிநாட்டு ஊழியர்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. சமீபத்தில் கடந்த மார்ச் மாதம் இங்கு நடைபெற்ற விபத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த 2 வெளிநாட்டுக்கு ஊழியர்கள் பலியாகினர். சாரக்கட்டு அறுந்து விழுந்ததில், 30 மற்றும் 42 வயதுடைய அந்த தொழிலாளர்கள், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம், 59 டன் எடை கொண்ட rudder அறுந்து விழுந்ததில், மந்தீப் குமார் (36) என்ற இந்திய தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
7.3 மீ உயரத்தில் இருந்து அறுந்து விழுந்த rudder, அவர் மீது மோதியதில் அவரது வலது கை துண்டிக்கப்பட்டது. இதனால், அவருக்கு சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட, அங்கேயே இறந்துவிட்டார். இதில் கொடுமை என்னவென்றால், மந்தீப் 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்திருக்கிறார், அவருக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆனால், அனைவரையும் விட்டுவிட்டு தன் உயிரை பறிகொடுத்தார்.
தமிழக ஊழியர் பெருமாள் அழகுராஜா
அதேபோல், கடந்த 2014ம் ஆண்டு மற்றொரு தமிழக ஊழியர் பெருமாள் அழகுராஜா என்பவர், Keppel Shipyard தளத்தில் இருந்த மாபெரும் குழாய் ஒன்றை சரிசெய்ய உள்ளே இறங்கிய மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
உள்ளே சென்று ஐந்து நிமிடம் ஆகியும், ஊழியர் பெருமாள் எந்தவித அசைவும் இன்றி இருந்ததை சக தமிழக ஊழியரான ரெங்கநாதன் சந்திரசேகரன் என்பவர் தான் கண்டறிந்தார். பிறகு அவரும் அந்த குழாய்க்குள் சென்று மயக்கமடைந்தார்.
சுமார் 22 மீட்டர் ஆழத்தில் பெருமாள் சுயநினைவின்றி கண்டறியப்பட்ட நிலையில், இருவரும் மேலே கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பெருமாள் அழகுராஜா கண் விழிக்காமலேயே உயிரை இழந்தார்.
அவருக்கு முறையாக பயிற்சி அளிக்காதது தான் இந்த விபத்துக்கு காரணம் என்று கடந்த 2020ம் ஆண்டு இந்த வழக்கில் நீதிமன்றம் முடிவுக்கு வந்தது.
‘ஒரு ஊழியருக்கு முறையாக பயிற்சி கொடுக்காமல் எப்படி ஆபத்து நிறைந்த குழாய்க்குள் இறக்கிவிடப்பட்டார்?’ என்ற கேள்வி சிங்கை முழுவதும் ஒலித்தது. அந்த நிறுவனத்தை நீதிமன்றம் மிகக் கடுமையாக விமர்சித்தது. முடிவில் கெப்பல் நிறுவனத்துக்கு 70,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
உயிரிழப்புகள் மட்டுமல்ல.. இங்கு மிகப்பெரிய அளவில் ஊழலும், லஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. கடந்த 14 ஆண்டுகளில் கெப்பர் நிறுவனத்தில் S$700,000 அளவுக்கு லஞ்சம் பரிமாறியுள்ளதாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி வாக்குமூலம் அளித்தது, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. CNA நிறுவனம் இதனை செய்தியாகவே வெளியிட்டிருந்தது.
இப்படி பல உயிரிழப்புகள், ஆறாத காயங்கள், லஞ்சங்கள் என்று சிங்கப்பூரின் Keppel Corporation நிறுவனம் பல மர்மங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.