சிங்கப்பூரில் இருந்து ஏப்ரல் 15 முதல் 17 வரை நில எல்லைகள் வழியாக மலேசியாவிற்குள் நுழைய திட்டமிட்டுள்ள பயணிகள் குடிவரவு அனுமதிக்கு என்று தனியாக கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று ஏப்ரல் 13 வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காரில் நில எல்லைகளைக் கடப்பதற்கு மூன்று மணிநேரம் வரை ஆகலாம் என்றும், 2019ம் ஆண்டுக்கு பிறகு இந்த அளவிலான காத்திருப்பு தற்போது தான் ஏற்படுகிறது என்றும் ICA கூறியது. வியாழன் மாலை 4 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதை தவிர்க்குமாறு ICA பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
அதேபோல சிங்கப்பூருக்கு உள்வரும் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்குள் சிங்கப்பூருக்குள் நுழைய முயற்சிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து இரு நாட்டு எல்லைகள் திறக்கப்பட்டதிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இரு நாடு எல்லையை கடந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று காலை ICA வெளியிட்ட தகவலின்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சிங்கப்பூரர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் இனி சிங்கப்பூரின் நிலச் சோதனைச் சாவடிகள் வழியாக நாட்டிற்குள் நுழையும்போது சுகாதார அறிக்கையை (Health Declaration) நிரப்ப வேண்டியதில்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.