TamilSaaga

சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான வெள்ளி கடன் வாங்கி சொந்த ஊருக்கு சாமான் வாங்கிச் செல்லும் இளைஞர்கள்… முழித்துக் கொள்ளுங்கள்.. நமக்கு நாம்தான் ஊன்றுகோல்!

பல கடன்களை வாங்கி, ஏஜெண்டுக்கு பீஸ் கட்டி சிங்கப்பூருக்கு வருவது ஒரு கடலை தாண்டுவதற்கு சமம் என்றால், சிங்கப்பூரில் வெற்றிகரமாக சம்பாதித்து வாழ்க்கையை நிலை நாட்டுவது ஏழு கடல்களை தாண்டுவதற்கு சமம். ஏனென்றால் சிங்கப்பூரில் வேலைக்கு வரும் இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். அதில் பெரும் சவால் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் பொழுது தனது உற்றார் உறவினர்களுக்கு பொருட்கள் வாங்கி செல்வது.

ஏனென்றால் சிங்கப்பூரிலிருந்து யாரேனும் வருகின்றனர் என்று தெரிந்தால் உறவினர்கள் கேட்கும் முதல் கேள்வி என்னப்பா நல்லா இருக்கீங்களா? அதற்கு அடுத்தபடியாக அவர்கள் கேட்கும் கேள்வி ஒரு தைல பாட்டில் கிடைக்குமாப்பா என்பது தான். அதற்காகவே சிங்கப்பூரின் முஸ்தபா ஷாப்பிங் சென்டரில் பண்டல் பண்டலாக தைல பாட்டிலை வாங்கும் இளைஞர்கள் ஏராளம். இப்படி ஒரு முறை ஊருக்கு செல்லும் பொழுது சாமான் வாங்க வேண்டுமென்றால் குறைந்தது 2000 வெள்ளி செலவாகும்.

அதிலும் குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு சாக்லேட், பொம்மை ஆகியவை வாங்குவதற்கு இன்னும் 2000 வெள்ளி கூடுதலாக செலவாகும். சிங்கப்பூரில் பொதுவாகவே தனது செலவெல்லாம் போக ஆயிரம் வெள்ளி சேமிக்கும் இளைஞர்களுக்கு இவ்வளவு காசு கொடுத்து சாமான்கள் வாங்குவதற்கு எப்படி காசு கிடைக்கும். அதற்கு ஒரே வழி கடன் வாங்குவது தான். இவ்வாறு ஒரு முறை ஊருக்கு செல்வதற்கு மட்டும் கிட்டத்தட்ட 4 மாத சம்பளங்களை கடன் வாங்கும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்படுகின்றனர்.

அதற்கு பின்பு ஊருக்கு போய் செய்கின்ற செலவு தனி. நண்பர்களிடம் கடன்களை வாங்கி அதற்கு பின்னர் சம்பளம் வாங்கி கடன்களை சிறிது சிறிதாக கட்டும் இளைஞர்கள் ஏராளம். எனவே, சொந்த ஊருக்கு போகும் இளைஞர்களே உங்கள் சம்பளத்திற்கு ஏற்றார் போல் பொருட்கள் வாங்கி சென்றால் பெரும் சிரமத்தில் இருந்து விடுபடலாம். உறவினர்களுக்கு நம் சூழ்நிலை புரியாது என்பதால் அனைவரையும் திருப்தி படுத்த நம்மால் முடியாது. எனவே நம் சூழ்நிலை அறிந்து அதற்கேற்றார் போல் வாழ்வதே சிறப்பு.

Related posts