TamilSaaga

சாப்பிடலாம் வாங்க, உரையாடலாம் வாங்க : நம்ம உள்ளூர் உணவுகள் பற்றி – ஆரா. அருணாவின் பக்கங்கள்

நமது உயிருடைய இயக்கம் என்பது நமது உடலின் நலத்தை பொறுத்து அமைகிறது.நமது உடலின் நலமோ நமது உணவு பழக்க வழக்கத்தைப்  பொறுத்து அமைகிறது. உணவு பழக்கவழக்கத்தை சீராகப் பேணுவது  என்பது உயிரின் இயக்கத்தை சீராக பராமரிப்பதற்கு சமம். ஆனால் என்ன செய்வது ? விஞ்ஞானத்தின் வீரியமிகு ஓட்டக் களத்தில் ஓடிக் கொண்டிருக்கிற நமக்கு இந்த அடிப்படை உண்மை அடிக்கடி மறந்து போகிறது. அதை நினைவூட்ட தான் கொஞ்சம் தமிழ் முன்னோரின், நம் உள்ளூரின் உணவு பழக்க வழக்கங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் இந்த ஆரா அருணாவின் பக்கத்தில்…

அறிவியலின் அசாத்திய வேகமும், வெளிநாட்டவர்களின் பழக்க வழக்கம், கலாச்சாரம் மீதான நமது ஆர்வமும், அவர்களை போலவே, அவர்கள் உண்பதையே நாமும் உண்ண வேண்டும் என்கிற ஆர்வக்கோளாறும், சோம்பல் மனநிலையும், சேர்ந்து தான் நமது உணவு பழக்கவழக்கத்தை முற்றிலுமாக மாற்றியிருக்கின்றன.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடனடி உணவுகள் ( Instant ), விரைவு உணவுகள் (fast food ), அடைக்கப்பட்ட உணவுகள் (packed food ), என எதெல்லாம் நமக்கு கேடு தருமோ அதெல்லாம்  தான் எங்கும் மலிவாக எளிதாக கிடைக்க, அதுவே நமது உணவு பழக்க வழக்கமாக மாறி, அதுவே நாகரிகமாக கருதப்பட்டு, நமது வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இவற்றிலிருந்து கண்டிப்பாக நாமும் நம்மவர்களும் காக்கப்பட வேண்டும். பெரிய அளவில், முற்றிலுமாக, ஆதி முதல் அந்தம் வரை நமது உணவு பழக்க வழக்கத்தை ஒரே நாளில் மாற்றிவிடுவது  கடினம்தான் என்றாலும் சின்ன சின்னதாய் சில நினைவூட்டல்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்வது நலம் தானேஇதோ உங்களுக்காக நம்மவர்களின் மரபுசார்ந்த சில உணவுப் பயன்பாட்டு குறிப்புகள்.

இதோடு இது வேண்டாம் !

உணவே மருந்து ! உண்மை தான் !  ஆனால் சில உணவுகளோடு சில உணவுகளைச் சேர்க்கும் பொழுது உணவே நஞ்சாகும் ஆபத்தும் உண்டு. அதையும் தமிழ் முன்னோர்கள் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். உதாரணமாக

  • மீன் புளிப்பான பொருட்கள் கீரைகளை உண்ட பிறகு பால் சேர்க்கக்கூடாது.
  • கோழி கறி சாப்பிடும் பொழுது தயிர் சேர்க்க கூடாது.
  • தயிர் சேர்க்கும் பொழுது வாழைப்பழம் சாப்பிடக்கூடாது.
  • மது அருந்துபவர்கள் அகத்திக்கீரை தொடவே கூடாது.
  • திணை சார்ந்த உணவு வகைகள் எடுப்பதாக இருந்தால், கோழிக்கறி இறால், நண்டு போன்றவைகளை அருகிலேயே கொண்டு வரக்கூடாது.

சரி சில நேரங்களில் சில உணவுகள் நஞ்சாகி விட்டது. எப்படி சரி செய்வது அந்த நஞ்சை? அதற்கும் வழி சொல்லி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

  • முட்டைக்கு  முள்ளங்கி
  • பலாப்பழத்துக்கு  தேன்
  • தேங்காய்க்கு கரும்பு
  • வெல்லத்துக்கு பச்சரிசி
  • உளுந்து வடைக்கு கொத்தமல்லி விதை
  • அரிசி சோறுக்கு சீரக குடிநீர்
  • வெற்றிலைக்கு தேங்காய்ப்பால்
  • புகையிலைக்கு அகத்திக்கீரை
  • வேர்க்கடலைக்கு வெல்லம் , இஞ்சி சாறு

என ஒரு உணவு பொருளை மிகுதியாக உண்டு, அது வயிற்றுக்கு ஒவ்வாமல் போகும் போது, அதற்கு மாற்றாக என்ன உண்ண வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் நம் தமிழ் முன்னோர்கள்.

அடுத்ததாக  சமையலில் பொதுவாக இன்றைக்கு பயன்படுத்துகிற சிலவற்றை விட அவற்றுக்கு பதிலாக இன்னொன்றை, இன்னொரு முறையை பயன்படுத்துவது உடலுக்கு நல்லது என்கிறார்கள். அந்த விபரத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இதைவிட இது நல்லது !!!

  • தாளிப்பதை விட தாளிக்காமல் செய்வது
  • முதலில் தாளிப்பதைவிட கடைசியில் தாளித்துச் சேர்ப்பது
  • தேங்காய் நிலக்கடலை எண்ணையை விட அவற்றை அரைத்து பயன்படுத்துவது
  • வெள்ளை சர்க்கரையை விட நாட்டு சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி.
  • வெள்ளை வெல்லத்தை விட கருப்பு வெல்லம்,
  • வெள்ளை கற்கண்டை விட பனங்கற்கண்டு
  • நெல் அரிசியை விட திணை, சாமம், போன்ற சிறுதானியங்கள்
  • மருந்து அடித்து பளபளப்பாக இருக்கும் காயை விட மருந்து அடிக்காத சொத்தை காய்கறி.
  •  மாட்டுப் பாலை விட பருத்திப்பால் 
  • துவரம் பருப்பை விட பாசிப் பருப்பு
  • தாளிக்க கடுகை விட சீரகத்தூள்
  • தேநீரை விட இயற்கை குடிப்புகள்
  • பழச்சாற்றை விட பழங்களை வெட்டி,கடித்து சுவைத்து உண்பது
  • சுத்திகரித்த எண்ணையை விட செக்கில் ஆட்டிய எண்ணெய்
  • பிற எண்ணெய்களை விட கடலை எண்ணெய் நல்லெண்ணெய்

இப்படி அதைவிட இது என எது சிறப்பாக உள்ளதோ அதைப் பயன்படுத்துவது ஒரு நல்ல ஆரோக்கியமான மாற்றத்தின் தொடக்கம் தானே!

அரிசிக்கு மாற்று ….

தமிழர்களின் இன்றைய முதன்மையான உணவு அரிசி. அரிசியைத் தொடர்ந்து உண்பது நல்லது அல்ல. எனவே அரிசிக்கு மாற்றாக  கோதுமையில் செய்யப்பட்ட பொருட்கள், கோதுமை மாவில் செய்யப்பட்ட பொருட்கள், ஓட்ஸ் (சீமை கொள்ளு) போன்றவைகளைத்தான் உண்ண வேண்டும் என நாற்பதைக் கடந்து விட்ட நடுத்தர மக்களின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது பல மருத்துவ ஆலோசனைகளும்,சில தொலைக்காட்சி விளம்பரங்களும்.   உண்மையில் இன்றைக்கு நாம் உண்ணும் இந்த  பளபளப்பான அரிசியும்,அது  சார்ந்த உணவுகளும் நல்லது அல்ல தான் . ஆனால் அதேசமயம் இதற்கு மாற்றாக, நாம் உண்ணக்கூடிய கோதுமை மைதா போன்றவையும் கெடுதி தான் .அரிசிக்கு மாற்றாக இவைகளை உண்ண ஆரம்பிக்கும் பொழுது அரிசியால் வரும் நோய்களை விட இன்னும் கூடுதல் நோய்கள் வருகின்றன என்பதுதான் உண்மை. எனவே அரிசிக்கு மாற்று வேண்டும்பொழுது பயிர்வகைகள், கூடுதலான காய்கள், பழங்கள் போன்றவற்றை நாம் சமைக்காமல் உண்ணலாம். அதைவிட இந்த பளபளப்பான நெல் அரிசிக்கு பதிலாக நமது மரபு நெல்லரிசி, சிவப்பரிசி, கம்பரிசி, என இன்றைக்கும் பயன்பாட்டில் இருக்கின்ற தானிய அரிசிகளைப் பயன்படுத்தலாம். எனவே அரிசிக்கு மாற்று அரிசிதான்மாறாக கோதுமையோ ஓட்சோ ஒருபோதும் நெல் அரிசிக்கு மாற்றாக முடியாது.

இன்றைக்கு நாம் தொடர்ந்து உண்கிற வெறும் சாம்பார், புளிக்குழம்பு, சில கூட்டு வகைகள், அல்லது வெளியே உண்ணக்கூடிய வெகுசில துரித உணவுகளின் பட்டியல் இவைகளைத் தாண்டி நம் மரபு உணவில், எண்ணும் போதே எச்சில் ஊற வைக்கிற, இன்றைக்கும் புழக்கத்தில் இருக்கிற, மரபு உணவுகளில் சிலவற்றை உங்கள் ஆசையை தூண்டுவதற்காக இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இவற்றில் எதன் செய்முறை  வேண்டுமானாலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.

சிறு தவச பொங்கல், திணை சக்கரை பொங்கல், பனங்கிழங்கு புட்டு, கம்பு புட்டு, வெல்ல இட்டளி, தாளித்த இட்டளி, கருப்பட்டி ஆப்பம், மொச்சை கொட்டை அடை, கீரை அடை, கம்பு கார தோசை, வாழைப்பூ தோசை, சிவப்பு அரிசி உப்புமா,  நெல்லிக்காய் துவையல், உடனடி இட்லி பொடி, எள்ளுப்பொடி, கொள்ளுப்பொடி, வெள்ளைப் பூண்டு பொடி, அரிசி கஞ்சி, பால் கஞ்சி, வரகு அரிசி கஞ்சி, வரகு புளி சோறு, சாமை கருவேப்பிலைச் சோறு, பருத்தி பால் சோறு, பதநீர் சோறு, உளுந்து ரசம், வாழைப்பூ துவட்டல்….

இன்னும் பல….

இன்னும் பல…..

இன்னும் பல ….

பாரம்பரிய உணவு சமையல் குறிப்புகளுடன்

உங்கள்

ஆரா அருணா !

Related posts