TamilSaaga

“லாரி வேண்டாம் மினி பஸ் இருக்கு” : சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கென்று வந்த “Aespada”

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு தொழிலாளர்களின் பங்கு என்பது மிகவும் பெரியது என்றால் அது சற்றும் மிகையல்ல எனலாம். சிங்கப்பூர் அரசும் தங்களின் வளர்ச்சிக்காக பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகின்றது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் dormitoryகளில் இருந்து வேலையிடங்களுக்கு லாரிகளில் அழைத்துச்செல்லப்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

ஆனால் அப்படி செல்லும்போது மழை, வெயில் மற்றும் புழுதி ஆகிவற்றால் பெரும் அவஸ்தைக்கு அவர்கள் உள்ளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில நேரங்களில் பாதுகாப்பு இன்றி லாரிகளில் பயணம் செல்லும்போது மரணங்களும் நிகழ்கின்றன என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. இவ்வாண்டு தொடக்கத்தில் PIE சாலை விபத்தில் ஒரு இந்திய தொழிலாளர் உள்பட இருவர் இறந்தது நினைவுகூரத்தக்கது.

இந்த இக்கட்டான சூழலில் வெளி­நாட்­டு ஊழியர்கள் சிறிய அளவிலான பேருந்­து­களில் மிகுந்த வசதியுடன் அதே நேரத்தில் அவர்களின் முதலாளிகள் அவர்களை ஏற்­பு­டைய விலை­யி­லும் பாதுகாப்பாக பய­ணம் செய்ய உத­வும் ஒரு போக்குவரத்து சேவையை சிங்கப்பூரில் உள்ள Aespada என்ற புதிய உள்­ளூர் நிறு­வ­னம் அறிமுகம் செய்துள்ளது. Aespada SL என்ற செயலி மூலம் இந்த சேவை பயன்படும் என்று அந்த நிறுவன தலைவர் லீ கூறியுள்ளார். முதலாளிகள் அவர்களுடைய தேவைக்கு ஏற்ற நேரத்தில் முன்­ப­திவு செய்­யக்­கூ­டிய போக்குவரத்து வாகனங்களின் பட்­டி­யலை முழுமையாக இந்த செயலி வழங்­கும் என்றும் அவர் கூறினார்.

இந்த சேவை இந்த மாதம் 22ம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது என்றும், இந்த சேவை மூலம் முதலாளிகள் தேவைப்படும் நேரத்தில் சிறிய ரக சிற்றுந்துகளை புக் செய்துகொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தொழிலாளிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளலாம், அதே போல வாகனங்களை வாங்கும் மற்றும் பராமரிக்கும் செலவு முதலாளிகளுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

13 தொழிலாளர்களை 30 கி.மீ தொலைவில் உள்ள பணியிடத்திற்கு அழைத்துச் செல்ல ஒவ்வொரு மாதமும் ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு ஒரு தொழிலாளிக்கு 378 வெள்ளி செலவாகும் ஆனால் Aespadaன் சேவையுடன், ஒரு தொழிலாளிக்கு 267 வெள்ளி தான் செலவாகும் என்று அவர் கூறினார். மேலும் இந்த ஒப்பீட்டில் ஒரு கட்டுமான நிறுவனம் செலுத்தும் காப்பீடு மற்றும் சாலை வரி போன்ற செலவுகள் அடங்கும்.
Aespada, அதன் கூட்டாளருடன், ஏழு முதல் 13 இருக்கைகள் வரையிலான 11 மினி பேருந்துகளைக் தற்போது வைத்துள்ளது. மேலும் 200 மினி பேருந்துகளுக்குக் அதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

Related posts